

கரோனா தடுப்பூசி உள்ளிட்ட மருந்துகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்படுகிறது. இதை உள்ளீட்டு வரியாக (இன்புட் டாக்ஸ் கிரெடிட்) உற்பத்தி நிறுவனங்கள் உரிமை கோரி பெற முடியும். இதனால் மருந்து பொருட்களின் விலையை அவை குறைவாக நிர்ணயிக்க முடியும். இதனால்தான் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடிக்கு வரி குறைப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக இந்த பதிலை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கரோனா தடுப்பூசிகளுக்கு 5 சதவீதமும், ஆக்சிஜன் கான் சன்ட்ரேட்டர்களுக்கு 12 சதவீதமும் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
இவற்றுக்கு முழுமையான வரி விதிப்பு அளிக்க முடியாது. ஏனெனில் உள்நாட்டில் இந்த மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் வரி விலக்கு பெற முடியாது. அதாவது உள்ளீட்டு பொருள் கொள்முதல் மற்றும் சேவைகளுக்கு வரி விலக்கு பெற முடியாது. இதைக் கருத்தில் கொண்டே குறைந்த வரி விதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பதிவில் பதிலளித்துள்ளார்.
இன்புட் டேக்ஸ் கிரெடிட் என்பது உள்ளீட்டு வரி விலக்கு என்பதாகும். அதாவது பொருளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதற்கான மூலப்பொருட்களை வாங்கும் நிறுவனங்களுக்கு அதற் குரிய வரியை அளிப்பதன் மூலம் விலக்கு பெற முடியும். அதேசமயம் முழுமையான வரி விலக்கு பெறும் பொருட்களுக்கு இத்தகைய சலுகை கிடைக்காது. உள்ளீட்டு வரி விலக்கு இருப்பதாலேயே மருந்து உற்பத்தி நிறுவனங்கள் அவற்றின் விலையைக் குறைவாக நிர்ணயிக்கின்றன. இதன் பலன் மக்களுக்குக் கிடைக்கும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
ஏற்கெனவே கரோனா தடுப்பூசி மருந்துகளுக்கான மூலப்பொருட்களுக்கு இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் (ஐஜிஎஸ்டி) 70 சதவீதம் வரை விலக்கு அளிக்கப்ட்டுள்ளது.
3-வது கடிதம்
மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்ற பிறகு பிரதமருக்கு எழுதும் 3-வது கடிதமாகும். மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவது குறித்தும் தனது கடிதத்தில் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.25 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆயிரமாகும். மாநிலத்தில் பகுதியளவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.ஏற்கெனவே கரோனா தடுப்பூசி மருந்துகளுக்கான மூலப்பொருட்களுக்கு இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐஜிஎஸ்டி 70 சதவீதம் வரை விலக்கு அளிக்கப்ட்டுள்ளது.