நேரு, இந்திரா வகுத்த நிர்வாக முறையால்தான் கடினமான காலத்திலும் இந்தியா தாக்குப்பிடிக்கிறது: மத்திய அரசை சாடும் சிவசேனா

சிவேசனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே | கோப்புப்படம்
சிவேசனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே | கோப்புப்படம்
Updated on
2 min read

ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி அமைத்துக் கொடுத்துச் சென்ற நிர்வாக முறையால்தான் இந்தக் கடிதமான காலத்திலும் இந்தியா வாழ முடிகிறது என்று மத்திய அரசை சிவசேனா கட்சி சாடியுள்ளது.

சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 70 ஆண்டுகளுக்கு முன் இருந்த முன்னாள் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு, அதன்பின்னர் பிரதமர்களாக இருந்த இந்திரா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோரின் நிர்வாக முறை, ஆட்சியால்தான் இன்றுள்ள கடினமான காலகட்டத்திலும் இந்தியாவால் தாக்குப்பிடித்து வாழ முடிகிறது

இந்தியாவில் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் உலக நாடுகளுக்கே அச்சுறுத்தலாக இருக்கிறது என யுனிசெப் அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது.

ஆதலால், உலகளவில் அதிகமான நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும் என யுனிசெப் கோரி்க்கை விடுத்துள்ளது. வங்கதேசம் 10 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகளை அனுப்பியுள்ளது, பூட்டான் மருத்துவ ஆக்சிஜன் அனுப்பியது. நேபாளம், மியான்மர், இலங்கை நாடுகள் கூட தற்சார்பு இந்தியாவுக்கு உதவிகளை அளித்துள்ளன.

இன்னும் தெளிவாகக் கூறினால், நேரு, இந்திரா அமைத்துக்கொடுத்த நிர்வாகமுறையால்தால் இந்தியா தாக்குப்பிடிக்கிறது. பல ஏழை நாடுகள் கூட இந்தியாவுக்கு உதவி செய்கின்றன. பாகிஸ்தான், ருவாண்டா, காங்கோ நாடுகள் முன் மற்ற நாடுகளிடம் இருந்து உதவிகளைப் பெற்றன. ஆனால், இந்தியாவில்ஆளும் ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளால், இந்தியாவும் அந்தநிலைக்குத் தள்ளப்பட்டது.

ஏழை நாடுகள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றன. ஆனால், பிரதமர் மோடி, ரூ.20 ஆயிரம் கோடியில் செய்துவரும் தன்னுடைய மத்திய விஸ்டா திட்டத்தை நிறுத்தத் தயாராக இல்லை.

உலக நாடுகள் கரோனா 2-வது அலையில் போராடி வரும் போது, 3-வது அலை இதைவிட தீவிரமாக இருக்கும் என கணித்துள்ளார்கள். ஆனால், ஆளும் பாஜக அரசு மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியை குறிவைத்தே அனைத்து நடவடிக்கைகளையும் இறங்குகிறது.

உணர்வுள்ள மற்றும் தேசப்பற்றுள்ள அரசு அரசியலில் சாதகம், பாதகம் பார்க்காமல், அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஆலோசித்து பெருந்தொற்றை தோற்கடிக்க தேசியக் குழுவை அமைப்பார்கள்.

பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி விடுத்த கோரிக்கையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தோல்வி அடைந்துவிட்டார், அவருக்குப் பதிலாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சுகாதாரத்துறை அமைச்சராக நியமனம் செய்யுங்கள் எனத் தெரிவித்தார்.

இந்தியா கடந்த 10 நாட்களாக அதிகமான கரோனா மரணங்களைச் சந்தித்து வருகிறது. உலகளவில் கரோனாவில் உயிரிழக்கும் 5 பேரில் இந்தியாவில் ஒருவர்., கடந்த 10 நாட்களில் 36,110 பேர் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு மணிநேரமும், நாட்டில் 150 பேர் கரோனாவில் மரணமடைகிறார்கள்.

கரோனா மரணத்தில் அமெரிக்கா, பிரேசில் நாடுகளை பி்ன்னுக்குத் தள்ளிவிட்டோம். உலகம் இந்தியாவைப் பார்த்து அச்சப்படுகிறது.

பல நாடுகள் தங்கள் குடிமக்களை இந்தியாவுக்குச் செல்ல வேண்டாம் என தடுத்துள்ளன.ஆனால் நம் நாடு பொருளதார சுமையை இந்த நேரத்தில் தாங்கி வருகிறது.

முந்தைய பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, வி.வி.நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோர் செய்த வளர்ச்சித்திட்டங்கள், பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைளால் தான் இந்தக் கடினமான நேரத்தில் இந்தியா தாக்குப்பிடித்து நிற்கிறது அதற்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு சிவசேனா தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in