

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தலைநகர் டெல்லியில் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை இன்னும் புதிதாக பல கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன. டெல்லி மெட்ரோ ரயில் சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வரும் மே 15 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், "ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 35% மாக இருந்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 23% ஆகக் குறைந்துள்ளது. ஆனால், மருத்துவ நிபுணர்கள் இதுவே அதிகம் என்கின்றனர். கரோனா பரவல் சங்கிலியை முற்றிலுமாக உடைக்க வேண்டும். அதற்காகவே கரோனா ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.
இந்த ஊரடங்கு காலத்தில் மருத்துவ உட்கட்டுமான வசதியை மேம்படுத்தியிருக்கிறோம். டெல்லியின் பெரும் பிரச்சினையாக ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது. மத்திய அரசின் உதவியுடன் இப்போது நிலைமை எவ்வளவோ மேம்பட்டுள்ளது" என்றார்.
தலைநகர் டெல்லியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 4 வாரம் எட்டப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தொடர்ந்து 4-வது நாளாக கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 4.03 லட்சம் பேர் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர், 4,092 பேர் உயிரிழந்தனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அன்றாட பாதிப்பு விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருவதால் உலகளவில் கரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது.