

மருத்துவமனைகளில் கரோனாநோயாளிகளை அனுமதிக்க தொற்று உறுதி செய்யப்பட்டதற்கான அறிக்கை இனி கட்டாயமல்ல என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா 2-வது அலை தீவிரமடைந்துள்ளது. கரோனா நோயாளிகளை மருத்துவமனைகளில் அனுமதிக்க பல்வேறு நிபந்தனைகள் அமலில் உள்ளன. இதனால் நோயாளிகள் சிரமப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிப்பது தொடர்பான விதிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் தளர்த்தி உள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளை அனுமதிக்க தொற்று உறுதி செய்யப்பட்டதற்கான அறிக்கை இனி கட்டாயம் இல்லை. கரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஒரு நோயாளிக்குக் கூட சிகிச்சை மறுக்கப்படக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வேறு நகரங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட எந்தக் காரணத்துக்காகவும் நோயாளிகளுக்கு அனுமதி மறுக்கக் கூடாது. ஆக்சிஜன் அல்லது அத்தியாவசிய மருந்துகள் என நோயாளிக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
கரோனா உறுதி செய்யப்படாத, லேசான அறிகுறி உள்ளவர்களை தனி வார்டில் வைத்து கண்காணிக்க வேண்டும். இந்த விதிமுறைகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் பொருந்தும்” என கூறபட்டுள்ளது.