Last Updated : 09 May, 2021 03:15 AM

 

Published : 09 May 2021 03:15 AM
Last Updated : 09 May 2021 03:15 AM

கரோனா எதிர்ப்பு மருந்துக்கு அனுமதி- டிஆர்டிஓ விஞ்ஞானி டில்லி பாபு தகவல்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்துள்ள கரோனா எதிர்ப்பு மருந்தினை அவசரகால பயன் பாட்டுக்கு இந்தியா அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து டிஆர்டிஓ விஞ்ஞானி டில்லி பாபு 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியதாவது:

டிஆர்டிஓ மற்றும் முக்கிய ஆய்வு நிறுவனங்கள் கண்ட றிந்துள்ள 2 ‍- டியாக்ஸி - டி - குளுக்கோஸ் 2 டிஜி (2-deoxy-D-glucose 2‍ DG மருந்தானது ஆபத்தான நிலையில் உள்ள கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை மருந்து ஆகும். இதுவரை கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், அதன் அறிகுறிகளுக்கு ஏற்றவாறு ம‌ருத்துவர்கள் மருந்து கொடுத்து சிகிச்சை அளிக்கின்றனர். இந்த முறையால் உயிரிழப்புகளை தவிர்க்க முடிவதில்லை.

இந்த சூழலில், டிஆர்டிஓ நிறுவனமும், டாக்டர் ரெட்டி பரிசோதனை மையமும் இணைந்து கடந்த ஓராண்டாக ஆராய்ச்சி மேற்கொண்டு இந்த மருந்தை உருவாக்கியுள்ளன. இந்த மருந்து மூன்று கட்டங்களாக பரிசோதிக்கப்பட்டது.

2ம் கட்ட சோதனையின் போது கரோனா பாதித்து ஆபத்தான நிலையில் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்த 110 நோயாளிகளுக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்டது. அதில் வெற்றிகரமான முடிவுகள் கிடைத்ததால், மூன்றாம் கட்டமாக நாட்டில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 220 நோயாளிகளுக்கு இந்த மருந்து பரிசோதிக்கப்பட்டது. அப்போதும் நோயாளிகளின் உடல்நிலையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் காணப்பட்டது.

இதன் அடிப்படையில், இந்திய மருந்து பொது கட்டுப்பாட்டு கண்காணிப்பாளர் (DCGI) இந்த மருந்தை, மிதமான மற்றும் தீவிரமான பாதிப்பு உள்ள கரோனா நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை மருந்தாக பயன்படுத்த அனுமதித்துள்ளார்.

குளுக்கோஸ் அடிப்படை யிலான இம்மருந்தை நீரில் கலந்து பருகியதும் நோயாளியின் உடலில் கரோனா வைரஸ் பாதித்த செல்லில் படிந்து, அந்த வைரஸ் கிருமி மேலும் பெருகாமல் தடுக்கிறது. இதனால் மருந்தை உட்கொள்வதால் நோயாளிகள் ஏறக்குறைய 3 நாட்களுக்கு முன்பாகவே குணமடைகிறார்கள். அவர்களின் உடலில் ஆக்ஜிசனும் அதிகரிக்கிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவும் தற்போதைய சூழலில் இந்த மருந்து ஓர் அருமருந்து என்றே கூறலாம்.

இந்த மருந்தானது, ஊசி மூலமாக செலுத்தாமல் வாய் வழியாக உட்கொள்ள முடியும். மருத்துவத் துறை சாராதவர்களும் பயன்படுத்தும் வகையில் இருப்பதால், நாட்டின் பல பகுதிகளுக்கு கொண்டு சென்று, கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு எளிதாக பயன்படுத்த முடியும்.

இவ்வாறு டில்லி பாபு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x