

மேற்கு வங்கத்தில் 3-வது முறையாக முதல்வர் பதவியேற்ற மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த 3-ம் தேதி கடிதம் அனுப்பினார்.
அதில், "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகளில் 65 சதவீதம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இதுவே தடுப்பூசி பற்றாக்குறைக்கு முக்கிய காரணம். 140 கோடி இந்தியர்களுக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போட வேண்டும். அதற்காக மத்திய அரசு ரூ.30,000 கோடியை ஒதுக்கினால் போதுமானது.
இதன்மூலம் தேசிய அளவிலான கரோனா இலவச தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த முடியும்" என்று குறிப்பிட்டிருந்தார். இதே கருத்தை வலியுறுத்தி பிரதமருக்கு அடுத்தடுத்து அவர் கடிதங்களை அனுப்பி வருகிறார்.
அந்த வரிசையில் பிரதமர் மோடிக்கு முதல்வர் மம்தா நேற்று புதிதாக கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
தேசிய அளவிலான கரோனா தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். இதற்கு ரூ.30,000 கோடியை ஒதுக்குவது மிக சாதாரண விஷயம். ஆனால் பாஜக அரசு நிதியை ஒதுக்க மறுக்கிறது. கரோனா நிவாரண வசூலுக்காக தொடங்கப்பட்ட பி.எம்.கேர்ஸ் நிதி என்னவானது? புதிய நாடாளுமன்ற வளாகம் கட்ட மத்திய அரசு ரூ.20,000 கோடியை செலவிடுகிறது. ஆனால் கரோனா தடுப்பூசிக்கு நிதி ஒதுக்க மறுக்கிறது. தற்போது தடுப்பூசி, ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் வன்முறை கள் நடைபெறுவதாக சமூக வலை தளங்களில் பாஜக வதந்திகளை பரப்பி வருகிறது. தேர்தல் தோல்வியை சகித்து கொள்ள முடியாமல் மேற்குவங்கத்துக்கு மத்திய அரசு சிறப்பு குழுவை அனுப்பி வைத்துள்ளது.
இவ்வாறு மம்தா கூறியுள்ளார்.
இதற்கிடையில், இந்தியர்கள் அனைவருக்கும் இலவசமாக கரோனா வைரஸ் தடுப்பூசி போட மத்திய அரசுக்கு உத்தர விட வேண்டும் என்று கோரி மேற்குவங்க அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.