

ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டம் கீர்வா கிராமத்தைச் சேர்ந்த தாமோதர்தாஸ் என்பவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 21-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் கிராமத்தில் தகனம் செய்யப் பட்டது.
ஆனால் இதில் உரிய கரோனா விதிமுறைகளை யாரும் பின்பற்ற வில்லை எனத் தெரிகிறது. இந்த தகன நிகழ்ச்சியில் 150 பேர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து அந்த கிராமத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். உடல் அடக்கம் செய்யும்போது உடலை பிளாஸ்டிக் உறையில் இருந்து எடுத்து வைத்து பின்னர் எரியூட்டி யுள்ளனர். பலர் அந்த உடலை வெறும் கைகளால் தூக்கியுள்ளனர். இதனால்தான் கரோனா பரவி கிராமத்தில் அடுத்தடுத்து 20 பேர் இறந்துள்ள னர். தாமோதர்தாஸ் உள்பட 21 பேர் கரோனாவால் உயிரிழந்ததாக கிராமத்தார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து லஷ்மண்கர் பகுதி சப்-டிவிஷனல் அதிகாரி குல்ராஜ் மீனா கூறும்போது, “கீர்வா கிராமத்தில் ஏப்ரல் 15 முதல் மே 5 வரை 4 பேர் மட்டுமே கரேனாவால் இறந்துள்ளனர். மற்ற 17 பேர் இறந்தது வயது மூப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால்தான். மேலும் கிராமம் முழுவதும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்துள்ளோம். கிராமத்தில் கரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.