

பஞ்சாப் மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்புகள் அதிகமாகி வருகின்றன. மயானங்களில் உடல்களை எரிக்க இடமில்லாமல் தவிக்கின்றனர். இதை சமாளிக்க மயானத்தில், நடமாடும் இரும்பு டிராலியை ஏற்பாடு செய்துள்ளனர். ராம்கர்ஹியா கல்வி கவுன்சில் ஏற்பாட்டின்படி தோலேவல் மயானத்தில் இந்த நடமாடும் டிராலி உடல்களை எரிக்க பயன்படுத்தப்படுகிறது. மயானத்தின் எந்த மூலைக்கும் இதை தள்ளி சென்று உடல்களை எரிக்கலாம்.
இதுகுறித்து ராம்கர்ஹியா கல்வி கவுன்சில் தலைவர் ரன்ஜோத் சிங் கூறும்போது, ‘‘மயானத்தில் ஒரே நேரத்தில் 7 உடல்கள் எரிக்க முடியும். எனினும், தற்போது தினமும் 12 உடல்கள் வருகின்றன. எனவே, நடமாடும் டிராலியை வடிவமைக்க நினைத்தோம். அதன்படி சக்கரங்கள் வைத்து எந்த இடத்துக்கும் தள்ளி செல்லும் வகையில் டிராலி செய்தோம். சிலிக்கா மண்ணில் செய்யப்பட்ட கற்களில் டிராலியின் படுக்கை செய்யப்பட்டுள்ளது. இது 1,600 டிகிரி செல்சியஸ் வெப்பத்தையும் தாங்கும். நான்கு மூலைகளிலும் இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே, உடல்களை எரிக்க மரக்கட்டைகளும் குறைவாக இருந்தால் போதும்’’ என்றார்.