

தமிழகத்தில் கரோனா நிலவரம் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் தொலைபேசியில் விசாரித்தார் பிரதமர் நரேந்திர மோடி. தமிழகம் முழுவதும் வரும் 10ம் தேதி (மே 10) முதல் மே 24 வரை இரண்டு வார காலம் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின், "ஊரடங்கு காலமாக அறிவிக்கவில்லை என்றால் கரோனாவைக் கட்டுப்படுத்துவது சிரமமாகிவிடும். பக்கத்தில் உள்ள மாநிலங்களும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார்கள்.
தமிழக அரசும் ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்துகிறது. இந்த 14 நாட்களும் ஊரடங்கு கட்டுப்பாட்டைப் பயன்படுத்தி நாட்டு மக்கள் அனைவரும் கட்டுப்பாடாக இருந்தால் தொற்று பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம் என" விளக்கமளித்துள்ளார்.
முன்னதாக நேற்றிரவு, தேசிய ஆக்சிஜன் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு உடனடியாக கூடுதல் ஆக்சிஜனை வழங்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று பிரதமர் மோடி - தமிழக முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் உரையாடினர். இந்த உரையாடலின்போது தமிழகத்தில் கரோனா நிலவரம் குறித்தும், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் முதல்வரிடம் பிரதமர் மோடி விசாரித்ததாகத் தெரிகிறது.
இதேபோல், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் மாநில முதல்வர்களுடனும் பிரதமர் மோடி உரையாடி அந்தந்த மாநில கரோனா நிலவரங்களைக் கேட்டறிந்தார்.
தமிழகத்தில் அன்றாடம் 25,000 பேருக்குக் கரோனா பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதி ஆகியவற்றை அறியும் வகையில் மாநில அரசு பிரத்யேக இணையதளத்தை அறிவித்திருக்கிறது.
முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்ட முதல் ஐந்து கையெழுத்தில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெறுபவர்கள் இன்னலைத் தீர்க்க தமிழக அரசே மருத்துவக் காப்பீடு திட்டம் மூலம் அதை ஏற்கும் என்பதும் ஒன்று.
இவ்வாறாக அரசும் கரோனாவைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி, ஸ்டாலின் உரையாடல் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பை முதல்வர் கோரினார்.
இதுதொடர்பாக, ஒன்றிய அரசுக்கு தமிழக அரசும் துணை நிற்கும் என உறுதியளித்தார். தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கையான ஆக்சிஜன் தொடர்பாக, மாநிலத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாகஉயர்த்தி வழங்க வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டார்.
இந்தக் கோரிக்கையை உடனடியாகப் பரிசீலிப்பதாக உறுதியளித்த பிரதமர், கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பரிசோதனைகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகளவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், தொற்றால் அதிகம் பாதிக்கப்படாத நோயாளிகளை வீட்டிலேயே இருக்கச் செய்து கண்காணிப்பதில் கவனம் செலுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.