

கரோனா பாதிப்பு அதிகரித்து வரும்நிலையில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட 3 மாநில முதல்வர்களை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை மக்களை பாடாய்படுத்தி வருகிறது, நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள், ஆயிரக்கணக்கில் உயிரிழக்கிறார்கள். பல்வேறு நகரங்களில் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசித் தட்டுப்பாடு, மருந்துகள் பற்றாக்குறை நிலவுகிறது. பல்வேறு மாநிங்களி்ல் விரைவாக அதிகரித்து வரும் கரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,01,078 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2,18,92,676ஆக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக சற்று குறைந்து இருந்த தினசரி கரோனா தொற்று இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
இதுவரை கரோனாவிலிருந்து 1,79,30,960பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 3,18,609பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது 37,23,446 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 4,187 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2,38,270 ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு கடுமையாக உள்ளது.
இந்தநிலையில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது கரோனாவை கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார். மேலும் மத்திய அரசு செய்ய வேண்டிய உதவிகள் குறித்தும் பிரதமர் மோடி பேசினார்.
இதுபோலவே மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் ஆகியோரையும் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். சம்பந்தப்பட்ட மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர்களுடன் பிரதமர் மோடி விவாதித்தார்.