3-ம் கட்ட கோவிட் தடுப்பூசித் திட்டம்: கோவின் இணையதளத்தில் புதிய பாதுகாப்பு அம்சம் சேர்ப்பு

3-ம் கட்ட கோவிட் தடுப்பூசித் திட்டம்: கோவின் இணையதளத்தில் புதிய பாதுகாப்பு அம்சம் சேர்ப்பு
Updated on
2 min read

3-ம் கட்ட கோவிட் தடுப்பூசித் திட்டத்தில் தவறுகளைக் குறைப்பதற்காக கோவின் இணையதளத்தில் புதிய பாதுகாப்பு அம்சம் சேர்க்கப்படடுள்ளது.

கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக, கோவின் இணையதளம் மூலம் முன் பதிவு செய்பவர்களில் சிலர், குறிப்பிடப்பட்ட தேதியில் தடுப்பூசி மையங்களுக்குச் செல்லாமல் உள்ளனர்.
ஆனால், அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதாக எஸ்.எம்.எஸ் செய்தி வந்துள்ளது. இது குறித்து ஆய்வு செய்த போது, தடுப்பூசி போடும் மருத்துவ ஊழியர், முன்பதிவு செய்த நபரை, தடுப்பூசி போட்டதாக கம்ப்யூட்டரில் தவறாக பதிவு செய்தது காரணம் என தெரியவந்தது.

இது போன்ற தவறுகளையும், இதைத் தொடர்ந்து மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களையும் குறைப்பதற்காக, கோவின் இணையதளத்தில் புதிய பாதுகாப்பு அம்சம் சேர்க்கப்படுகிறது. மே 8-ம் தேதி முதல், கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்பவர்களுக்கு 4 இலக்கப் பாதுகாப்பு எண் வழங்கப்படும். பயனாளி தகுதியான நபரா என சரிபார்த்த பின், தடுப்பூசி போடுவதற்கு முன்பாக, பயனாளியிடம் 4 இலக்கப் பாதுகாப்பு எண்ணை தடுப்பூசி போடும் மருத்துவ ஊழியர் கேட்டு, கோவின் இணையதளத்தில் அதனைப் பதிவு செய்வார். இதன் மூலம் தடுப்பூசி போடப்பட்டதை சரியாகப் பதிவு செய்ய முடியும்.

தடுப்பூசி போட ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த புதிய அம்சம் பொருந்தும். தடுப்பூசி போடுவதற்கான ஒப்புதல் சீட்டில் இந்த 4 இலக்கப் பாதுகாப்பு எண் அச்சிடப்படும். இது தடுப்பூசி போடும் ஊழியருக்கு தெரிவிக்கப்படாது. வெற்றிகரமாக முன்பதிவு செய்தபின், உறுதி செய்யப்படும் எஸ்.எம்.எஸ் தகவலில் இந்த 4 இலக்க எண் அனுப்பப்படும். இந்த ஒப்புதல் சீட்டை செல்போனில் சேமித்து வைத்தும் காட்டலாம்.

ஆன்லைன் மூலம் தடுப்பூசி போட முன்பதிவு செய்தவர்கள், தடுப்பூசி போட்டுக்கொண்டார்களா, இல்லையா என்பதை இதன் மூலம் உறுதி செய்ய முடியும். ஆன்லைன் மூலம் தடுப்பூசி போட முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் ஆள்மாறாட்டம், தவறான பதிவுகள் போன்றவை குறையும்.

மக்களுக்கான அறிவுறுத்தல்கள்:

ஆன்லைன் மூலம் தடுப்பூசி போட முன்பதிவு செய்பவர்கள் ஒப்புதல் சீட்டை அச்சிடப்பட்ட தாளாகவோ/ மின்னணு ஆவணமாகவோ அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணில் வந்த எஸ்.எம்.எஸ் தகவலுடனோ தடுப்பூசி போட்டுக்கொள்வதற்குச் செல்லலாம். இந்த 4 இலக்கப் பாதுகாப்பு எண்கள் மூலம் தடுப்பூசிப் பதிவுகளை எளிதாக நிறைவு செய்ய முடியும்.

இந்த 4 இலக்க எண்ணினை தடுப்பூசி போடும் மருத்துவ ஊழியரிடம் காட்ட வேண்டும். தடுப்பூசி போட்டபின், மின்னணு சான்ழிதழை வழங்குவதற்கு இந்த எண் முக்கியம்.

தடுப்பூசி போட்ட பின், உறுதி செய்யப்பட்டதற்கான எஸ்.எம்.எஸ், மின்னணு சான்றிதழ் இணைப்பு ஆகியவை மக்களுக்கு தாங்கள் பதிவு செய்த கைபேசி எண்ணுக்கு வரும். அவ்வாறு எஸ்.எம்.எஸ் வரவில்லை என்றால், அவர்கள் தடுப்பூசி போட்ட ஊழியர்/ தடுப்பூசி போடப்பட்ட மையத்தின் பொறுப்பாளர் ஆகியோரைத் தொடர்பு கொள்ளவும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in