அவதூறு வழக்கு: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
காங்கிரஸ் கட்சியின் சஞ்சய் நிருபம் தொடர்ந்த அவதூறு வழக்கில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நேரில் ஆஜராக டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 27 ஆம் தேதி ஸ்மிருதி இரானி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் ஸ்மிருதி இரானி தன்னைப்பற்றி மோசமாகப் பேசினார் என்று சஞ்சய் நிருபம் தொடர்ந்து அவதூறு வழக்காகும் இது.
அதே தொலைக்காட்சி விவாதத்தில் சஞ்சய் நிருபம் தன்னை அவதூறு செய்ததாக ஸ்மிருதி இரானியும் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்தப் புகாரின் மீதான விசாரணையில் சஞ்சய் நிருபம் விசாரிக்கப்பட்டார். சட்டப்பிரிவு 500-இன் கீழ் சஞ்சய் நிருபம் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனைக் கிடைக்கும்.
அந்த விவாதத்தின் போது ஸ்மிருதி இரானி ஒரு தொலைக்காட்சி நடிகை ஆகவே தேர்தல் முடிவுகள் ஆய்வு செய்ய என்ன தகுதி இருக்கிறது என்று சஞ்சய் நிருபம் கேட்டதாக இரானி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். தற்போது சஞ்சய் நிருபம் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணையில் செப்டம்பர் மாதம் ஸ்மிருதி இரானி ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
