Published : 08 May 2021 12:03 PM
Last Updated : 08 May 2021 12:03 PM

18-44 வயதுக்குட்பட்ட 11.8 லட்சம் பயனாளிகளுக்கு கோவிட்  தடுப்பூசி

புதுடெல்லி

கோவிட் தடுப்பூசித் திட்டத்தின் மூன்றாவது கட்டத்தில், 30 மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்த, 18-44 வயதுக்குட்பட்ட, மொத்தம் 11,80,798 பயனாளிகளுக்கு இதுவரை கோவிட் தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் 8,419 பேருக்கும், புதுச்சேரியில் ஒருவருக்கும் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை 7 மணி நிலவரப்படி, நமது நாட்டில் மொத்தம் 24,11,300 அமர்வுகளில், 16,49,73,058 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. மொத்த எண்ணிக்கையில் 66.84 சதவீதத்தினர் 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் 23 லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசித் திட்டத்தின் 111-வது நாளான மே 6-ந் தேதி மட்டும் 23,70,298 தடுப்பு மருந்து டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 18,938 அமர்வுகள் வாயிலாக 10,60,064 பயனாளிகளுக்கு முதல் டோசும், 13,10,234 பயனாளிகளுக்கு இரண்டாவது டோசும் அளிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்று 1,76,12,351-ஐ எட்டியுள்ளது. தேசிய குணமடையும் விகிதம் 81.95 விழுக்காடாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,31,507 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 4,14,158 பேர் கோவிட் தொற்றினால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 71.81 சதவீதத்தினர் 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவில் அதிக அளவாக 62,194 பேரும், கர்நாடகாவில் 49,058 பேரும், கேரளாவில் 42,464 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவிட் தொற்றுக்காக 34,45,164 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கையில் 25 சதவீதத்தினர் 10 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

தொற்றினால் இறப்பவர்களின் தேசிய விகிதம் 1.09 விழுக்காடாக சரிந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,915 பேர் கொவிட் தொற்றால் இறந்துள்ளனர். டாமன் டையூ & தாத்ரா நாகர்ஹவேலி, அருணாச்சலப்பிரதேசம், லடாக், மிசோரம் ஆகியவற்றில் கடந்த 24 மணி நேரத்தில் எந்த இறப்பும் நிகழவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x