

மத்திய நிதியமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ஊழலை அனுமதிக்கமாட்டோம் என குரல் கொடுத்த பிரதமர் தற்போது மவுனியாக இருப்பது ஏன்? என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் விவகார சர்ச்சையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை வெளிப்படையாக விமர்சித்து வரும் கீர்த்தி ஆசாத், கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பாஜகவிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அமேதியிலிருந்து டெல்லி திரும்பும் வழியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, "தேர்தல் பிரச்சார மேடைகளில் பிரதமர் மோடி நான் ஊழலில் ஈடுபடமாட்டேன், என் கட்சியினர் வேறு யாரும் ஊழல் செய்யவும் விடமாட்டேன் எனக் கூறினார்.
ஆனால், இன்று அவரது கட்சியில் ஊழல்கள் நடைபெறுகின்றனர். ஊழல் பட்டியலில் கடைசியாக இடம்பெற்றுள்ளது டெல்லி கிரிக்கெட் சங்க புகார். இதில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஊழலை அனுமதிக்கமாட்டேன் எனக் கூறிய பிரதமரோ மவுனமாக இருக்கிறார். மக்கள் பாஜக மீது நம்பிக்கை இழக்கத் தொடங்கிவிட்டனர். எனவே, டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்க ஊழல் புகார் மீது உரிய விசாரணை நடத்தி பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.