

தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் இந்தியாவில் கரோனா மூன்றாவது அலையைத் தவிர்க்கலாம் என மத்திய அரசின அறிவியல் ஆலோசகர் கே.விஜயராகவன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த புதன் கிழமையன்று அவர் இந்தியாவில் தற்போது கரோனா வைரஸ் பரவல் வேகத்தை வைத்துப் பார்க்கும்போது இந்தியாவில் மூன்றாவது அலையைத் தவிர்க்கமுடியாது. ஆனால், அது எப்போது ஏற்படும் என்பதைக் கூற முடியாது என்றும் கூறியிருந்தார்.
மேலும், பிரிட்டனில் இருந்து வந்த மரபணு மாற்றம் பெற்ற கரோனா பரவலின் வேகம் குறைந்துவிட்டது எனவும் தற்போது இந்தியாவிலேயே உருவான இரட்டைமுறை மரபணு மாற்றம் பெற்ற கரோனாவே வீரியமாகப் பரவி வருவதாகவும் கூறியிருந்தார்.
அவரின் இந்தப் பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், "கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாகப் பின்பற்றுவதன் மூலம் நாட்டில் மூன்றாவது அலை ஏற்படாமல் தடுக்கலாம். கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநிலங்களில், மாவட்டங்களில், நகரங்களில் என ஒவ்வொரு பகுதிவாரியாக கடுமையாகக் கடைபிடித்தால் மூன்றாவது அலை என்ற ஒன்று நெருங்காமல் இருக்கச் செய்யலாம். இல்லையேல் குறைந்தபட்சம் எல்லா இடங்களிலும் மூன்றாவது அலை ஏற்படுவதையாவது தடுக்கலாம்" என மத்திய அரசின அறிவியல் ஆலோசகர் கே.விஜயராகவன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரையில்லாத வகையில் 4.14 லட்சம் பேர் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர், 3,915 பேர் உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் இதுவரை 2.1 கோடி பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 2,34,083 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி 36 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதுவரை 16.50 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா மூன்றாவது அலை அச்சமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது. இச்சூழலில், மத்திய அரசின அறிவியல் ஆலோசகர் கே.விஜயராகவனின் பேச்சு ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் மைக்ரோ கட்டுப்பாட்டுப் பகுதிகளை அமைத்து கண்காணிக்க வேண்டும், தடுப்பூசி திட்டத்தைத் துரிதப்படுத்த வேண்டும், மக்கள் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
கடைசி ஆயுதமாக முழு ஊரடங்கைப் பயன்படுத்தலாம் என்றும் மாநில அரசுகளுக்கு அறிவுரை கூறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.