

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கும், தன்னுடைய அறம் சார்ந்த மதிப்பீடுகளுக்கும் இடையே இணக்கம் இல்லாததால், தேர்தல் ஆணைய வழக்கறிஞர் பதவிலியிருந்து விலகுவதாக வழக்கறிஞர் மோகித் டி.ராம் தெரிவித்துள்ளார்.
கரோனா பரவலுக்குத் தேர்தல் ஆணையமே காரணம், 2 மாதங்களாகத் தேர்தல் பிரச்சாரங்களைத் தடுத்து நிறுத்தவில்லை என்று தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் கடுமையாக விமர்சித்தது.
இந்த வழக்கில் நீதிபதிகள் தெரிவித்த கருத்துகளை ஊடகங்கள் செய்தியாக்கத் தடை விதிக்கக் கோரி, தேர்தல் ஆணையம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் நேற்றைய விசாரணையின்போது, ''நீதிபதிகள் கூறும் கருத்துகளை ஊடகங்கள் செய்தியாக வெளியிடத் தடை விதிக்க முடியாது. அரசியலமைப்புச் சட்டம் 19-வது பிரிவு மக்களுக்கு மட்டும் பேச்சு, எழுத்து சுதந்திரம் வழங்கவில்லை, ஊடகங்களுக்கும் வழங்கியுள்ளது'' என்று கூறிய உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.
இந்த வழக்கில் விசாரணை நடந்து வரும் நிலையில், மோகித் டி.ராம் ராஜினாமா செய்துள்ளார்.
மோகித் டி.ராம் தனது ராஜினாமா கடிதத்தில் கூறுகையில், “என்னுடைய அறம் சார்ந்த மதிப்பீடுகளுக்கும், தற்போது தேர்தல் ஆணையம் செயல்படுவதற்கும் இணக்கம் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டேன்.
ஆதலால், உச்ச நீதிமன்றத்துக்கான தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர்கள் குழுவிலிருந்து நான் விலகுகிறேன். அனைத்து ஆவணங்கள், என்ஓசி மற்றும் வக்காலத்து மனு, நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.