

’நம்மை கரோனா தாக்காது என மெத்தனமாக இருக்காதீர்கள்’ என இளைஞர்களுக்கு டெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ சவுரவ் பரத்வாஜ் அறிவுரை கூறியுள்ளார்.
41 வயதான சவுரவ் பரத்வாவுக்கு கடந்த ஏப்ரல் 12ம் தேதி கரோனா தொற்று உறுதியானது. முதலில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட அவர் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கும் மாற்றப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை நாட்களை நினைவு கூர்ந்துள்ள எம்எல்ஏ சவுரவ் பரத்வாஜ் இளைஞர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "எனக்கு கரோனா தொற்று ஏற்பட்ட முதல் சில நாட்களில் காய்ச்சல் அதிகமாக இருந்தது. முதலில் நான் எனது உடல் காய்ச்சலை எதிர்த்துப் போராடுவதாக நினைத்தேன். மருத்துவர்கள் ஆலோசனையின்படி மருந்துகளை உட்கொண்டேன். ஒருவாரத்துக்குப் பின்னர் என் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.
இன்னும் சில பரிசோதனைகள் செய்யப்பட்டன. எனது நுரையீரல் பாதிக்கப்பட்டது தெரிந்தது. அன்றைய மாலையே ஆக்சிஜன் அளவும் குறைந்தது. எனக்கு மருத்துவ ஆக்சிஜன் வழங்கப்பட்டது. மிகவும் மோசமான உடல்நிலை பாதிக்கப்பட்டபோது உதவியற்றவனாக உணர்ந்தேன். பாதி மயக்க நிலையில், நம் படுக்கையின் பக்கத்து படுக்கையில் இருந்த நோயாளி உயிரிழப்பதைப் பார்ப்பது கொடுமையானது.
இன்று எனக்கு கரோனா நெகட்டிவ் அறிக்கை வந்துள்ளது.
இது ஆறுதல் அளித்தாலும், இன்னும் எனது நுரையீரல் முழுவீச்சில் செயல்படவில்லை. இளைஞர்கள் நமக்கெல்லாம் கரோனா தொற்று ஏற்படாது என அலட்சியமாக இருக்கிறார்கள். அது மாயை. கரோனா யாரை வேண்டுமானாலும் பாதிக்கும். ஆகையால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்"
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரையில்லாத வகையில் 4.14 லட்சம் பேர் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர், 3,915 பேர் உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் இதுவரை 2.1 கோடி பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 2,34,083 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி 36 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
புதுவகை கரோனா இளைஞர்கள் மத்தியில் வேகமாகப் பரவுவதாக எச்சரிக்கைகளை விடுக்கப்பட்டுவரும் நிலையில், டெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ சவுரவ் பரத்வாஜ், இளைஞர்களுக்கு முன்வைத்துள்ள அறிவுரை முக்கியத்துவம் பெறுகிறது.