மேற்கு வங்க சட்டம்-ஒழுங்கு நிலவரம்: அறிக்கை சமர்ப்பிக்க ஆளுநருக்கு மத்திய உள் துறை அமைச்சகம் உத்தரவு

மேற்கு வங்க சட்டம்-ஒழுங்கு நிலவரம்: அறிக்கை சமர்ப்பிக்க ஆளுநருக்கு மத்திய உள் துறை அமைச்சகம் உத்தரவு
Updated on
1 min read

மேற்கு வங்க சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு அம்மாநில ஆளுநருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது, பாஜக எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது.

இதில் தங்கள் கட்சித் தொண்டர்கள் 9 பேர் உயிரிழந்ததாக பாஜக தெரிவித்துள்ளது. ஆனால் திரிணமூல் காங்கிரஸ் இதை மறுத்துள்ளது.

இந்நிலையில், மத்திய உள் துறை செயலாளர் அஜய் பல்லா மேற்கு வங்க தலைமைச் செயலாளருக்கு நேற்று முன்தினம் ஒரு கடிதம் எழுதினார். அதில், தேர்தலுக்குப் பிறகு நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரிக்குமாறு கடந்த 3-ம் தேதி எழுதிய கடிதத்தை நினைவுபடுத்தி உள்ளார். மேலும் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூழ்நிலையில், மேற்கு வங்கத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து அறிக்கை அனுப்புமாறு அம்மாநில ஆளுநர் ஜெக்தீப் தன்கருக்கு மத்திய உள் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கூடுதல் செயலாளர் தலைமையில் சிஆர்பிஎப் அதிகாரி உள்ளிட்ட 4 உறுப்பினர்கள் அடங்கிய குழுவை மத்திய உள் துறை அமைச்சகம் மேற்கு வங்கத்துக்கு அனுப்பி உள்ளது.

இதையடுத்து கொல்கத்தா சென்றுள்ள இக்குழு, மாநிலத்தின் கள நிலவரத்தை நேரடியாக மதிப்பீடு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in