Last Updated : 06 May, 2021 07:03 PM

 

Published : 06 May 2021 07:03 PM
Last Updated : 06 May 2021 07:03 PM

தென்னிந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் வேகமாகப் பரவும் உருமாற்ற கரோனா வைரஸ்: தீவிரத் தொற்றை ஏற்படுத்தும் என ஆந்திர அரசு எச்சரிக்கை

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி | கோப்புப்படம்

அமராவதி

மிகத் தீவிரமான தொற்றை ஏற்படுத்தக்கூடிய பி.1.617 மற்றும் பி.1 வகை உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ், தென்னிந்தியாவில் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானாவில் இளைஞர்கள் மத்தியில் வேகமாகப் பரவுவதாக ஆந்திரப் பிரதேச அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கரோனா வைரஸ்களில் என்440கே வகை வைரஸ் மிகுந்த வீரியம் கொண்டதாக முன்பு இருந்தது. ஆனால், அந்த வைரஸ் தற்போது வீரியத்தை இழந்துவிட்டது என்று திசு மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான மையத்தின் ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆந்திர அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆந்திரப் பிரதேச அரசின் கோவிட் கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் கே.எஸ்.ஜவஹர் ரெட்டி விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''தென்னிந்தியாவில் குறிப்பாக ஆந்திரா, தெலங்கானா, கர்நாடக மாநிலங்களில் கடந்த ஏப்ரல் மாதம் கரோனா தொற்று ஏற்பட்டவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் புள்ளிவிவரங்களை ஆய்வு செய்தோம். அதில் தீவிரமான தொற்றையும் பாதிப்பையும் ஏற்படுத்தும் பி.1.617, பி.1, ஆகிய இரு உருமாறிய கரோனா வைரஸ் இளைஞர்கள் மத்தியில் அதாவது பதின்பருவத்தினர் தவிர்த்து வேகமாகப் பரவுகிறது.

கடந்த மாதம் 25ஆம் தேதி உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட வார அடிப்படையிலான தொற்றுநோய் குறித்த செய்தி வெளியீட்டில், இந்தியாவில் என்440கே சீரிஸ் வைரஸ் குறித்து குறிப்பிடவில்லை. பி.1.617, பி.1 வைரஸ்கள் பற்றித்தான் குறிப்பிட்டிருந்தது. இந்த வைரஸ்களின் மாதிரிகள் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவில் சேகரிக்கப்பட்டு, மரபணு வரிசைக்காக ஹைதராபாத்தில் உள்ள சிசிஎம்பி ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும், சராசரியாக 250 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சிசிஎம்பி மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் 2020ஆம் ஆண்டு ஜூன், ஜூலை மாதத்தில்தான் என்440கே வகை வைரஸ்கள் இந்தியாவில் காணப்பட்டன. அதன்பின் டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டு, 2021 பிப்ரவரி மாதம் ஆங்காங்கே கண்டறியப்பட்டு, மார்ச் மாதம் முற்றிலும் காணவில்லை. ஆனால், மிகச்சிலருக்கு மட்டுமே என்440கே வகை வைரஸ்களால் தொற்று ஏற்படுகிறது.

என்440கே வைரஸ்கள் குறித்த ஆய்வில் தீவிரமான தொற்றுள்ளது, உருமாற்றம் அடையும் என்பது குறித்துச் சொல்லவில்லை. இந்த வகை வைரஸ்கள் மக்களுக்குப் பெரிய தீங்கை விளைவிப்பதாக இருந்தால், உலக சுகாதார அமைப்பு, ஐசிஎம்ஆர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்”.

இவ்வாறு ஜவஹர் ரெட்டி தெரிவித்தார்.

சமீபத்தில் ஆந்திரப் பிரதேசத்தில் என்440கே வகை வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. அதனால் மோசமான உயிரிழப்பும், தொற்றுவேகம் அதிகரிக்கும் என்று செய்தி வெளியானது. இதை ஜவஹர் ரெட்டி மறுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x