கரோனா பாதிப்பு; வெளிநாடுகள் இந்தியாவுக்கு வழங்கும் உதவி குறித்து வெளிப்படைத் தன்மை தேவை: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி | கோப்புப்படம்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி | கோப்புப்படம்
Updated on
2 min read

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதைப் பார்த்து, உலக நாடுகள் வழங்கும் உதவிகள் குறித்து மத்திய அரசு வெளிப்படைத் தன்மையைப் பராமரிப்பது அவசியம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய அரசு்கு வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து, நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கில் உயிரிழக்கிறார்கள். இதைப் பார்க்கும் உலக நாடுகள் ஆக்சிஜன் செறிவாக்கிகள், உயிர் காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள், பிபிஇ கிட், நிதியுதவி என ஏராளமானவற்றை இந்தியாவுக்கு வழங்கி வருகின்றன.

வெளிநாட்டு உதவிகள் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசுக்கு ட்விட்டரில் கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், “இந்தியாவுக்கு வெளிநாடுகள் அளிக்கும் உதவிகள் குறித்து சில கேள்விகளைக் கேட்கிறேன். என்ன மாதிரியான மருத்துவ உபகரணங்களை இந்தியா வெளிநாடுகளில் இருந்து பெற்றது?, இந்த மருத்துவ உபகரணங்கள், நிதியுதவியால் யார், எந்த மாநிலம் பயன்பெற்றது?, எவ்வாறு, எந்த அடிப்படையில் மாநிலங்களுக்கு உதவிகள் ஒதுக்கப்பட்டன?, ஏன் வெளிப்படைத் தன்மை இல்லை?, மத்திய அரசிடம் இருந்து ஏதாவது பதில் இருக்கிறதா” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்றொரு ட்வீட்டில் ராகுல் காந்தி கூறுகையில், ''கரோனா வைரஸைக் கையாள்வதிலும், தடுப்பூசி செலுத்துவதிலும், மக்களுக்கு வேலை வழங்குவதிலும் மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டது'' எனத் தெரிவித்தார். மேலும், இந்திய பொருளாதாரக் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையில் ஏப்ரல் மாதம் 75 லட்சம் வேலைவாய்ப்புகளை இந்தியா இழந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியையும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்துள்ளார்.

அந்த ட்வீட்டில், “தடுப்பூசியும் இல்லை, வேலைவாய்ப்பும் இல்லை. கரோனா வைரஸ் கொடுமையை மக்கள் அனுபவித்து வருகிறார்கள். மோடி அரசு முற்றிலும் தோல்வி அடைந்தது” என்று ராகுல் தெரிவித்தார்.

காங்கிரஸ் மக்களவை எம்.பி. மணிஷ் திவாரி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் உதவிகளை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்.

எந்தெந்த நாடுகளில் இருந்து எவ்வளவு நன்கொடை பெறப்பட்டது, மருந்துப் பொருட்கள் பெறப்பட்டன, அந்த உதவிகள் எந்தெந்த மாநிலத்துக்குச் சென்றன, நிறுவனங்களுக்குச் சென்றன, எந்தெந்த மாநிலங்களுக்கு உதவிகளை அனுப்பலாம் எனும் முடிவை யார் எடுத்தது எனத் தெரிவிக்க வேண்டும்” எனக் கேட்டுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் அதிக அளவில் நோயாளிகள் வந்ததாலும், ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் சுகாதார முறை சீர்குலைந்த செய்தியைப் பதிவிட்டார்.

அந்த பதிவிட்ட கருத்தில், “ஹர்ஷவர்தன், ஜெய்சங்கர் இருவரும் சிஎன்என் சேனல் வெளியிட்ட வீடியோவைப் பார்த்தீர்களா? இந்தக் காட்சியைத்தான் ஒவ்வொரு நாளும் உலகில் மற்ற நாடுகள் பார்த்து வருகின்றன. ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை, ஆக்சிஜன் பற்றாக்குறையால் மருத்துவமனையில் யாரும் இறக்கவில்லை என்று இருவரும் மறுக்கிறீர்களா? இந்த வீடியோவைப் பார்த்தபின் இரு அமைச்சர்களின் இதயங்கள் வருந்தவில்லையா. உங்கள் இதயங்கள் எதனால் உருவாக்கப்பட்டவை என்பதை அறிய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in