

சென்னை - மைசூரு இடையே யான சதாப்தி விரைவு ரயில் 'பயோ டீசல்' என்ஜின் மூலம் இயக்கப்பட்டது. சிக்கன திட்டம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உதவும் வகையில் ரயில்வே துறை மேற்கொண்டுள்ள இந்த முயற் சியை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
நீராவி, நிலக்கரி, மின்சாரம் மூலம் இயக்கப்பட்டு வந்த ரயில் தற்போது 'பயோ- டீசல்' (உயிரி எரிபொருள்) மூலம் இயக்கப்பட்டு வருகிறது.
நாட்டிலே முதல்முறையாக பயோ டீசல் என்ஜின் மூலம் இயங்கும் விரைவு ரயில் (ஜன சதாப்தி) கர்நாடக மாநிலம் ஹூப்ளி பெங்களூரு இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்கப்பட்டது.
தென்மேற்கு ரெயில்வே சார்பாக மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்துக்கு பயணிகளிடம் மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து சென்னை- மைசூரு இடையேயான சதாப்தி விரைவு ரயிலை பயோ டீசல் என்ஜின் மூலம் இயக்க தென் மேற்கு ரயில்வே தீர்மானித்தது. இதன் தொடக்கவிழா பெங்களூரு சிட்டி ரயில் நிலை யத்தில் நேற்று நடந்தது. இந் நிகழ்ச்சியில் பங்கேற்ற தென் மேற்கு ரயில்வே தலைமை பொறியாளர் பி.ஏ.லம்கரே கொடியசைத்து ரயிலை தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக தென்மேற்கு மண்டல ரயில்வே மேலாளர் சஞ்சீவ் அகர்வால் கூறும்போது, “பயோ டீசல் என்ஜின் மூலம் ரயில்களை இயக்குவதால் அதன் செலவு குறையும்.
அதிவேக டீசல் பயன்பாட்டுக்கு ஆகும் செலவைவிட 5 சதவீதம் குறைவான தொகையே பயோ டீசல் என்ஜினுக்கு ஆகிறது. இந்த பயோ டீசல் புதுப்பிக்கத்தக்க காய்கறி எண்ணெய்களில் இருந்து பெறப்படுவதால், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது.
இதன்மூலம் பயணிகளின் கட்டணமும் எதிர்காலத்தில் குறைய வாய்ப்புள்ளது. சிக்கன நடவடிக்கையின் பேரில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டாலும், சுற்றுச்சூழலுக்கும் பேருதவியாக அமைந்துள்ளது.
டீசல் என்ஜினில் இருந்து வெளியேறும் புகையைவிட, பயோ டீசல் என்ஜினில் மிகக் குறைந்த அளவிலான புகையே வெளியேறுகிறது.
இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுவதும் தடுக்கப்படும் என்பதால் சுற்றுச்சூழல் ஆர் வலர்கள் இதை வரவேற்றுள்ளனர். இதுபோல் பயோ டீசல் பயன்பாட்டை நாடு முழுவதும் பரவலாக்க வேண்டும்” என்றார்.