

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் போது டெல்லி மைதானத்துக்குள் சந்தேகத்துக்கிடமான வகையில் செயல்பட்ட 2 சூதாட்ட தரகர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் கடந்த 2-ம் தேதி டெல்லி அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையிலான ஆட்டம் நடைபெற்றது. அப்போது சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். போலி அடையாள அட்டையை பயன்படுத்தி மைதானத்திற்குள் நுழைந்த அவர்கள் இருவரையும் மத்திய மாவட்ட காவல் துறை சிறப்பு ஊழியர்கள் பிடித்தனர். இருவரும் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஐந்து நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
டெல்லி மத்திய காவல் துறை கூடுதல் ஆணையர் ரோஹித் மீனாகூறும்போது, “குற்றம் சாட்டப்பட்டவர்கள் வீட்டு பராமரிப்பு ஊழியர்களாக காட்டிக் கொண்டிருந்த மனீஷ் கன்சால் (38) மற்றும் தென் டெல்லி மாநகராட்சியின் சுகாதார பணியாளராக நடித்து வந்த கிரிஷன் கார்க் (26) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாங்கள் அவர்களுக்கு எதிராக ஐ பி எஸ்டேட் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்துள்ளோம், மேலும் அவர்களிடம் இருந்து அங்கீகார அட்டைகளை பறிமுதல் செய்துள்ளோம். அங்கீகார அட்டைகளின் நம்பகத்தன்மையையும் அவற்றை அவர்கள் எவ்வாறு பெற்றனர் என்பதை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஒப்புக் கொண்டனர்
இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார், பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழுவுக்கும் தகவல் தெரிவித்துள்ளோம். குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் சுமார் 45 நிமிடங்கள் கண்காணித்த பிறகே பிடித்து விசாரித்தோம். தொடக்கத்தில் அவர்கள், விசாரணை அதிகாரிகளிடம் தவறான தகவல்களை கூறினர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் ஒப்புக் கொண்டனர்" என்றார்.