கரோனா பரவலை கட்டுப்படுத்த ஆந்திராவில் 18 மணி நேர ஊரடங்கு: அதிக கட்டணம் வசூலித்த மருத்துவமனைகள் மீது நடவடிக்கை

கரோனா பரவலை கட்டுப்படுத்த ஆந்திராவில் 18 மணி நேர ஊரடங்கு: அதிக கட்டணம் வசூலித்த மருத்துவமனைகள் மீது நடவடிக்கை
Updated on
1 min read

ஆந்திராவில் கரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று முதல் 18 மணி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் தினசரி கரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆந்திராவில் நேற்று முதல் 18 மணி நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள், வணிக வளாகங்கள், மற்றும் பிற அலுவலகங்கள் திறந்திருக்கும். அதன் பிறகு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அரசு, தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டு விட்டன. அண்டை மாநிலமான தமிழகத்தில் இ-பாஸ்கட்டாயமாக்கப்பட்டதை தொடர்ந்து, ஆந்திராவில் இருந்து தமிழகம் செல்ல கரோனா நிபந்தனைகள் அமலுக்கு வந்துள்ளது.

இதனிடையே தனியார் மருத்துவமனைகளில் ஒய்.எஸ்.ஆர். ஆரோக்கிய  திட்ட இலவச மருத்துவ அட்டையின் கீழ் கரோனா தொற்றுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவிட்டார். ஆனால் பல்வேறு தனியார் மருத்துவமனைகள் இதை ஏற்காமல் நோயாளிகளை திருப்பி அனுப்பின.

இதையடுத்து பறக்கும் படைகள் அமைத்து ஆய்வு நடத்த முதல் ஜெகன் உத்தரவிட்டார். அதன்படி பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் அதிரடி ஆய்வு நடத்தினர். இதில், பல தனியார் மருத்துவமனைகள் கரோனா சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பது தெரியவந்ததால் அந்த மருத்துவமனைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன. மருத்துவர்கள் சிலரும் கைது செய்யப்பட்டனர். திருப்பதி, கடப்பா, விஜயவாடா, குண்டூர், நெல்லூர், விசாகப்பட்டினம் என முக்கிய நகரங்களில் பறக்கும் படையினர் மருத்துவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதனிடையே மாநிலத்தில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் 2-வது டோஸ்தடுப்பூசி போட முடியாமல் தவிக்கின்றனர். கிராமப் புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களுக்கும் படை எடுத்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in