

மேற்கு வங்கத்தில் அண்மை யில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் 3-வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. இங்கு தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பெருமளவில் வன்முறை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த ‘இண்டிக் கலெக்டிவ்’ என்ற அரசு சாரா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:
மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சியினருக்கு எதிரான வன்முறை வெடித்துள்ளது. இதில் எதிர்க்கட்சியினர் கொடூரமாக கொல்லப்படுகின்றனர். அவர்களின் வீடுகள் மற்றும் சொத்துகள் சேதப்படுத்தப்படுகின்றன. வெடிகுண்டு வீச்சு, கொலை, கொள்ளை, கடத்தல், தீவைப்பு, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், பெண்களுக்கு எதிரான தாக்குதல், பாலியல் வன்கொடுமை என குற்றங்கள் நிகழ்கின்றன.
வன்முறையாளர்களை மாநிலநிர்வாகமும் காவல் துறையினரும் கட்டுப்படுத்த தவறிவிட்டனர். பல்வேறு தரப்பு கோரிக்கைகள் மற்றும் வன்முறை செய்திகளுக்கு பிறகும் அங்கு அமைதியை பாராமரிக்க மாநில நிர்வாகம் தவறிவிட்டதால் அப்பாவி மக்களை காக்க உச்ச நீதிமன்றம் உடனே தலையிட வேண்டும். வன்முறை பாதித்த இடங்களில் மத்திய பாதுகாப்பு படைகளை நிறுத்த உத்தரவிட வேண்டும். மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வழிவகுக்கும் வகையில், அங்கு அரசியலைப்பு இயந்திரம் செயலிழந்துள்ளதாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.