

டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைத்த முடிவில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் நீதமன்றத்தை நாடி அதற்கான தீர்வை தேடிக் கொள்ளட்டும் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக 10 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்த காலத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக அண்மையில் புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஒரு நபர் விசாரணை கமிஷனை அமைத்துள்ளார். டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் விசாரணை கமிஷன் அமைப்பதற்கான அதிகாரம் அம்மாநில அரசுக்கு இல்லை என்று உள்துறை அமைச்சகத்துக்கு துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் கடிதம் எழுதியுள்ளார். இதனால் இந்த விவகாரத்தில் கேஜ்ரிவாலுக்கும், நஜீப் ஜங்குக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.
இந்நிலையில் விசாரணை கமிஷன் அமைத்த முடிவில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்று அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்த விவகாரத்தில், உள்துறை அமைச்சகத்துக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் நீதிமன்றத்தை நாடி அதற்கான தீர்வை தேடிக் கொள்ளட்டும். ஜனநாயக அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசுக்கு விசாரணை கமிஷன் அமைப்பதற்கான அதிகாரம் இருக்கிறது. எனவே சட்டவிரோதமான முறையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவிக்க முடியாது.
இவ்வாறு அர்விந்த் கேஜ்ரிவால் கூறினார்.