

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுடன் கூட்டணி சேரப் போவதில்லை என அம்மாநில காங்கிரஸ் அறிவித்துள்ளது.
பிஹாரில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவுக்கு கடும் போட்டி அளிக்கும் வகையில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டது. இதில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் இடம் பெற்றிருந்தன. இதே போல், உத்தரப் பிரதேச மாநிலத்தில் வரும் 2017-ம் ஆண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும், பாஜகவை வீழத்தும் வகையில் மெகா கூட்டணி அமைக்கும் நடவடிக்கையில் காங்கிரஸ் ஈடுபடும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் முலாயம் சிங்கின் சமாஜ்வாதி மற்றும் மாயாவதியின் பகுஜன்சமாஜ் ஆகிய இரு கட்சிகளுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என காங்கிரஸ் நேற்று திடீரென அறிவித்துள்ளது.
இது குறித்து உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் நிர்மல் கத்ரி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
மோடிக்கு எதிரான தேர்தல் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பிஹாரில் முதல்வர் நிதிஷ்குமாரும், முன்னாள் முதல்வர் லாலுவும் பகைமையை மறந்து கூட்டணி அமைத்துக் கொண்டனர். ஆனால், உத்தரப் பிரதேசத்தில் நிலைமை தலை கீழாக உள்ளது. சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் மறைமுக மாக பாஜகவுக்கு ஆதரவு தெரி வித்து வருகின்றன. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அண்மையில் டன் கணக்கில் செங்கற்கள் வந்து குவிந்துள்ளன. இதனை ஆளும் சமாஜ்வாதி அரசு கண்டுகொள்ளவே இல்லை. தேர்தலையொட்டி மாநிலத்தில் மதக் கலவரத்தை உருவாக்க பாஜக திட்டமிட்டுள்ளது. அதற்கு அம் மாநில அரசும் உறுதுணையாக உள்ளது. மத ரீதியாக ஓட்டுக்களை பிரித்து வரும் பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு, இரு தலைவர் களுமே (முலாயம் சிங், மாயாவதி) முட்டுக்கட்டை போடவில்லை.
தற்போது மத்திய அரசு மீது மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். அதே போல் ஆளும் சமாஜ்வாதி அரசையும் இந்த தேர்தலில் ஒழித்துக் கட்ட முடிவு எடுத் துள்ளனர். எனவே தான், வரும் தேர்தலில் மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ளக் கூடாது என முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.