ஜெர்மனி விசாவுக்காக சென்னையில் குவியும் சிரிய குடும்பங்கள்: மொழி, நிதிப் பிரச்சினையால் பரிதவிப்பு

ஜெர்மனி விசாவுக்காக சென்னையில் குவியும் சிரிய குடும்பங்கள்: மொழி, நிதிப் பிரச்சினையால் பரிதவிப்பு
Updated on
2 min read

கடந்த 2 மாதங்களில் மட்டும் சிரியாவைச் சேர்ந்த 20 குடும்பத்தினர் சென்னை வந்துள்ளனர். ஜெர்மனி நாட்டுக்குச் செல்ல விசா பெறுவதற்காக அவர்கள் இங்கு வந்துள்ளனர்.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரிய நாட்டிலிருந்து புகலிடம் தேடும் அகதிகள் அண்மைக்காலமாக இந்தியாவுக்கு வருவது அதிகரித்துள்ளது. இந்தியாவின் பெருநகரங்களில் உள்ள ஜெர்மனி தூதரகங்கள் வாயிலாக அந்நாட்டுக்குச் செல்ல விசா பெறுவதற்காக சிரிய மக்கள் இந்தியா வருவதாக தெரியவந்துள்ளது.

கடந்த 2 மாதங்களில் மட்டும் சிரியாவைச் சேர்ந்த 20 குடும்பத்தினர் சென்னை வந்துள்ளனர்.

சிரிய நாட்டுத் தலைநகர் டமாஸ்கஸில் இருந்து சென்னை வந்துள்ள பெண் ஒருவர் கூறும்போது, "இது கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்காலம் என்பதால் தூதரகத்துக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜெர்மனி விசாவுக்காக ஏற்கெனவே காத்திருப்போர் பட்டியலும் மிக நீளமாக உள்ளது. எனவே இன்னும் சில காலம் நான் காத்திருக்க வேண்டும்.

எனது கணவர் படகு மூலம் ஜெர்மனி சென்று விட்டார். ஆனால், பெண்கள், குழந்தைகள் அவ்வாறாக படகில் ஜெர்மன் செல்வது மிகவும் ஆபத்தானது. எனவேதான் இங்கு வந்துள்ளோம். எனது குடும்பத்துடன் மீண்டும் இணைய வேண்டும். சிரியாவில் இருந்த எங்களது உடைமைகள் அனைத்தையும் விற்றுவிட்டோம். துருக்கி, ஜோர்டான் நாடுகளிலும் ஜெர்மனி விசா பெற முடியும்.

ஆனால் அந்த நாடுகளில் எங்களை மிகவும் தரக்குறைவாக நடத்துகின்றனர். எனவேதான் ஈரான், இந்தியா, மலேசியா போன்ற நாடுகளுக்கு வருகிறோம். ஜெர்மனி விசா பெறும் நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இந்தியா வந்திருக்கிறோம். இது என் கதை மட்டுமல்ல இங்கு ஜெர்மன் விசாவுக்காக காத்திருக்கும் பல குடும்பங்களின் நிலையும் இதுவே" என்றார்.

சிரியாவைச் சேர்ந்த அகமது ஹூசைன் ஹைதராபாத்தில் கணினி படித்து வருகிறார். இவர் ஜெர்மன் தூதரங்களை விசாவுக்காக அணுகும் சிரிய மக்களுக்கு மொழிபெயர்ப்பாளராக பணியாற்றி வருகிறார்.

அவர் கூறும்போது, "இந்தியாவுக்கும் வரும் சிரிய மக்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். அவர்கள் இங்கு தங்குவதற்கு நிறைய செலவழிக்க வேண்டியிருக்கிறது. ஒரு நாளைக்கு 100 டாலர் வரை செலவாகிறது. பெரும்பாலான பெண்கள் அவர்களது கணவரையோ, தந்தையையோ பார்த்து ஆண்டுகள் பல கடந்துவிட்டன. அவர்களது குடும்ப, பொருளாதார நிலையைக் கருதி ஜெர்மனி தூதரகங்கள் விரைந்து நடவடிக்கை எடுத்தால் அவர்களுக்கு பேருதவியாக இருக்கும்" என்றார்.

அதேபோல் சென்னை விமான நிலையத்துக்கு வரும் சிரிய அகதிகள் மொழிப் பிரச்சினையால் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாக அகமது ஹூசைன் கூறுகிறார்.

சென்னை விமான நிலையத்தின் குடியேற்று அலுவலகங்களில் சிரியாவிலிருந்து வருபவர்களிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்படுவதாகவும் ஆனால் அரபு மொழியைத் தவிர வேறு மொழி தெரியாத அவர்கள் தவிப்புக்குள்ளாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னையில் உள்ள அரபு மொழிபெயர்ப்பாளர்கள் சிரிய அகதிகளிடம் அதிகக் கட்டணம் கோருவதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

இப்படி மொழிப் பிரச்சினை, பணப் பிரச்சினையில் சிக்கியுள்ள சிரிய அகதிகள் பலரும் முன்வைக்கும் ஒரே கோரிக்கை "தயவு செய்து எங்களுக்கு விரைவாக விசா வழங்குங்கள்" என்பதேயாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in