Published : 05 May 2021 09:19 PM
Last Updated : 05 May 2021 09:19 PM

கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு எதிரொலி: இந்தியாவில் தடுப்பூசி போடும் எண்ணிக்கை சரிவு

கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை கடந்த நான்கு நாட்களில் சரிவைச் சந்தித்துள்ளது.

இந்தியாவில் மார்ச் மாதத்திலிருந்து தொடங்கிய கரோனா இரண்டாம் அலை தாக்கம் தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கரோனா தொற்று தினமும் 3 லட்சத்தைத் தாண்டிச் செல்கிறது. உயிர் பலி எண்ணிக்கையும் தினந்தோறும் மூன்றாயிரத்தைக் கடக்கிறது.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தியாவில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால் நாட்டின் பல மாநிலங்களில் கரோனா தடுப்பூசி போடும் தினசரி எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதுகுறித்து ‘அவர் வேர்ல்ட் இன் டேட்டா’ (our world in data) வெளியிட்ட புள்ளிவிவரத்தில், ”இந்தியாவில் ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பிப்ரவரி மாதம் வரை ஒரு நாளைக்கு 5 லட்சம் பேர் என தடுப்பூசி போடப்பட்டது.

இந்த நிலையில் மார்ச் மாதத்திலிருந்து கரோனா தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையை இந்தியாவில் அதிகரித்தது. ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி ஒரு நாளில் அதிகபட்சமாக 30 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஆனால், ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்துவது படிப்படியாகக் குறையத் தொடங்கியது. கடந்த 4 நாட்களாக இந்தியாவில் தினசரியாக 20 லட்சத்துக்கும் குறைவானவர்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

கரோனா இரண்டாவது அலை காரணமாகப் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ள இந்தியாவில் தற்போது தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவுவது மருத்துவ நிபுணர்களைக் கவலையடையச் செய்துள்ளது. தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த நிலையில், “இந்தியாவில் சில மாதங்களுக்கு கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கும். ஜூலை மாதம் முதல் தடுப்பூசிகள் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறோம். ஜூலை மாதத்தில் 100 மில்லியன் வரை தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்படும்” என்று சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்தார்.

இந்தியாவில் இதுவரை 16 கோடிக்கும் அதிகமானவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x