

"முருகன், சாந்தன் உட்பட ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம், மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு" என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளான நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் கடந்த ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி தமிழக அரசு விடுதலை செய்தது. இதை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
"சிபிஐ-யால் விசாரிக்கப்பட்ட ஒரு வழக்கில், குற்றவாளிகளை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு. மேலும், ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிப்பதில் உரிய சட்ட நடைமுறை பின்பற்றப்படவில்லை" என்று மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது. குற்றவாளிகளின் தண்டனையைக் குறைக்கும் அதிகாரம், மாநில அரசுக்கும் உண்டு என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரின் விடுதலைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏழு கேள்விகள்
மேலும், சட்டச் சிக்கல் நிறைந்த இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "சிபிஐ விசாரணை நடத்திய ஒரு வழக்கில் குற்றவாளிகளை விடுவிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கா? மாநில அரசுக்கா? ஆயுள் தண்டனை என்பது ஆயுள் காலம் முழுமையும் சிறையில் இருக்க வேண்டுமா?" என்பது உள்ளிட்ட 7 கேள்விகளை எழுப்பி, இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கை, விசாரித்த தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, பி.சி.கோஸ், ஏ.பி.சாப்ரே, யு.யு.லலித் ஆகிய 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. அதில், "மத்திய விசாரணை அமைப்பான சிபிஐ விசாரித்த வழக்கு என்பதால், ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுவிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு. குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 435(2) -ன் படி, மத்திய அரசிடம் ஆலோசிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் அனுமதியுடன் விடுதலை செய்ய வேண்டும் என்பதாகும். ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுமையும் சிறையில் இருக்க வேண்டும் என்றுதான் அர்த்தம்" என்று கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம், இந்த தீர்ப்பு புதிய சட்ட நடைமுறையாக உருவாகி உள்ளது. மேலும், "ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை தமிழக அரசு விடுவித்தது சரியா, தவறா என்பதை 3 நீதிபதிகள் அடங்கிய வேறு அமர்வு விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும்" என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.