

உலக அமைதிக்காக தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் மகா சண்டி யாகத்தை நேற்று தொடங்கினார். தனது சொந்தப் பணம் ரூ. 20 கோடியை செலவிட்டு, அவர் இந்த யாகத்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
மேடக் மாவட்டம் எர்ரபல்லி என்ற பகுதியில் உள்ள அவரது பண்ணை நிலத்தில் மகா சண்டி யாகம் நடந்து வருகிறது. 108 ஹோம குண்டங்கள் இடம்பெறும் வகையில் யாக சாலைகள் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்தன. இதில் வேத விற்பன்னர்கள் அமர்ந்து கணபதி ஹோமத்துடன் சண்டி யாகத்தை தொடங்கினர். முதல் நாளான நேற்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தன் குடும்பத்தினருடன் பங்கேற்றார். சிறப்பு விருந்தினராக ஆந்திரா மற்றும் தெலங்கானாவுக்கான ஆளுநர் நரசிம்மன் கலந்து கொண்டார். தொடர்ந்து 5 நாட்கள் நடக்கவுள்ள இந்த மகா சண்டி யாகத்தில் மத்திய அமைச்சர்கள், பிற மாநில ஆளுநர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். நிறைவு நாளான 27-ம் தேதி குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.