ரேஷன் பொருட்கள் இலவசம்; ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம்: அரவிந்த் கேஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் | கோப்புப் படம்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் | கோப்புப் படம்.
Updated on
1 min read

டெல்லியில் கரோனா வைரஸ் பரவலைச் சமாளிக்க தற்போது நடைமுறையில் இருக்கும் லாக்டவுனால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு உதவும் வகையில் அடுத்த 2 மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். வாடகை கார், ஆட்டோ ஓட்டுநர்கள் தலா ஒருவருக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று அறிவித்தார்.

டெல்லியில் கடந்த 3 வாரங்களுக்கு முன் கரோனா வைரஸால் நாள்தோறும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதனால் டெல்லியின் மருத்துவ அமைப்பு முறையே சீர்குலைந்துவிடும் நிலைக்குச் செல்வதாக முதல்வர் கேஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, கடந்த 3 வாரங்களாக கடும் விதிககளுடன், அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கி ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த 3 வார ஊரடங்கால் கரோனா பாதிப்பு 30 சதவீதம் குறைந்து, தினசரி பாதிப்பு 18 ஆயிரமாகக் குறைந்துள்ளது.

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''டெல்லியில் லாக்டவுன் கொண்டுவந்தபின், கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால், இந்த லாக்டவுனால் பலருக்கும் பணச்சிக்கல், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கட்டுமானத் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பதிவுசெய்த கட்டிடப் பணியாளர்களுக்கு கடந்த மாதம் ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கினோம்.

இந்நிலையில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் அடுத்த 2 மாதங்களுக்கு இலவசமாகப் பொருட்கள் வழங்கப்படும். ஆட்டோ, வாடகை கார் ஓட்டுநர்களும் தினசரி வருமானம் ஈட்டுபவர்கள். அவர்களும் லாக்டவுன் காலத்தில் சிரமப்படுவார்கள் என்பதால், பதிவு செய்த ஓட்டுநர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். இந்தச் சலுகை தொடர்ந்து வழங்கப்படாது. கரோனா பாதிப்பு குறைந்தவுடன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, ஊரடங்கு நீக்கப்படும்.

இந்த உதவி மக்களுக்குப் போதுமானதாக இருக்காது என்பது தெரியும். இருப்பினும், இந்த நேரத்தில் அரசின் சிறிய உதவியாக அவர்களுக்கு இருக்கும். கடந்த ஆண்டு லாக்டவுன் காலத்தில் 1.56 லட்சம் ஓட்டுநர்கள் நிதியுதவி பெற்றார்கள். நாம் கடினமான காலத்தைக் கடந்து கொண்டிருக்கிறோம். மிகவும் ஆபத்தான 2-வது அலையைக் கடக்க வேண்டும்''.

இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in