

பாஜகவின் அகங்காரம், ஆணவம்தான் மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் அந்தக் கட்சி தோல்வி அடைவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகும் என சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் 292 தொகுதிகளுக்கும் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் வென்றது. ஆட்சி அமைக்க 148 எம்எல்ஏக்கள் இருந்தாலே போதுமானது. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் வென்று அசுரபலத்துடன் 3-வது முறையாக ஆட்சியில் அமர்கிறது.
தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குக் கடும் போட்டியளித்த பாஜக 77 இடங்களில் மட்டுமே வென்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது.
மேற்கு வங்கத்தில் பாஜக தோல்வி அடைவதற்கான காரணங்கள் குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மேற்கு வங்கத் தேர்தலில் பாஜக தோல்வி அடைவதற்கான முக்கியக் கராணங்களில் ஒன்று பாஜகவின் அகங்காரம், ஆணவப் போக்குதான். மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியில் இருந்து இறங்கியதற்கு கூட அந்தக் கட்சியின் சகிப்பின்மைப் போக்குதான் காரணம்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான சகன் புஜ்பல், மேற்கு வங்கத் தேர்தலில் வென்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சியையும், மம்தா பானர்ஜியையும் பாராட்டிப் பேசினார். ஆனால், இதைக்கூட சகிக்க முடியாத பாஜக மாநிலத் தலைவர் சந்திகாந்த் பாட்டீல் கடுமையாக விமர்சித்துள்ளார். புஜ்பல் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை புகழ்ந்து பேசியதில் என்ன தவறு இருக்கிறது.
மேற்குவங்கத்தில் பாஜக தோல்வி அடைந்ததற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றே அந்தக் கட்சியின் அகங்காரம், ஆணவப்போகுக்தான். மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட தோல்வியால் விரக்தி அடைந்த பாஜகவால் மகாராஷ்டிராவில் பந்தர்பூர் இடைத் தேர்தலில் கிடைத்த வெற்றியைக் கொண்டாட மனது வரவில்லை.
பந்தர்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் மகாவிகாஸ் அகாதியின் வேட்பாளர் தோற்றுவிட்டார். இருப்பினும் மகாவிகாஸ்அகாதியைச் சேர்ந்த அனைவரும் பாஜகவுக்கு வாழ்ததுக் கூறினோம், வெற்றியாளருக்கு வாழ்ததுக் கூறினார்கள். ஆனால், வெற்றி பெற்றவேட்பாளருக்கு வாழ்த்துத் தெரிவித்தவர்களை மகாவிகாஸ்த அகாதி கூட்டணியைச் சேர்ந்த யாரும் மிரட்டவில்லை.
இவ்வாறு சிவேசனா தெரிவித்துள்ளது.