Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

மும்பையில் கரோனா நோயாளிகளுக்காக இலவசமாக ஆட்டோ ஓட்டும் ஆசிரியர்

மும்பையைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் ஏழை கரோனா நோயாளிகளுக்காக இலவசமாக ஆட்டோவை இயக்கி வருகிறார்.

மும்பையின் கட்கோபர் பகுதியைச் சேர்ந்தவர் தத்தாத்ரேயா சாவந்த். அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆங்கில ஆசிரியராக உள்ளார். மும்பையில் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், சாவந்த் ஆட்டோ ஒன்றை வாங்கி சேவை செய்து வருகிறார்.

இதுகுறித்து சாவந்த் கூறும்போது, “கரோனா நோயாளிகள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. குறித்த நேரத்தில் சிகிச்சை கிடைக்காத காரணத்தால் பலர் உயிரிழக்கின்றனர். குறிப்பாக அரசின் இலவச ஆம்புலன்ஸ் கிடைக்காததால் ஏழை நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களால் தனியார் ஆம்புலன்ஸ்களில் பயணிக்க முடியாத நிலைஉள்ளது. நோயாளிகளுக்கான பொது போக்குவரத்தும் இல்லை.

இத்தகைய சூழலில் ஏழை நோயாளிகளை குறித்த நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக ஆட்டோ ஒன்றை வாங்கி உள்ளேன். ஏழை நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்ல என் உதவியை நாடலாம். குணமடைந்தவர்களை அவர்களுடைய வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன்.

இதற்காக கட்டணம் வாங்குவதில்லை. அதேநேரம், பாதுகாப்பு கவச உடை, அடிக்கடி வாகனத்தை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுகிறேன்” என்றார்.

இவரது இந்த சேவையை பலரும் பாராட்டுவதுடன், நிதியுதவி வழங்கவும் முன்வந்துள்ளனர். இதனிடையே, ஆட்டோவுக்கான எரிபொருள் செலவை ஏற்பதாக மாநில நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x