Last Updated : 04 May, 2021 03:13 AM

 

Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

கர்நாடகாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 கரோனா நோயாளிகள் உயிரிழப்பு

பெங்களூரு

கர்நாடகாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 24 கரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக கர்நாடகாவில் தினமும் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை, ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. கடந்த 26-ம் தேதி கோலார் மாவட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 8 நோயாளிகள் உயிரிழந்தனர்.

சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் நேற்று முன் தினம் இரவு கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. நோயாளிகள் சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்ட நிலையில், மருத்துவமனை நிர்வாகம் மைசூருவில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டரை வரவழைக்க முயற்சித்தது. உடனடியாக ஆக்சிஜன் சிலிண்டர்களை வரவழைக்க இயலாமல் போனது. ஆக்ஸிஜன் கிடைக்காமல் நள்ளிரவு 12 மணியில் இருந்து அதிகாலை 3 மணிக்குள் 24 கரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் வெளியானதை தொடர்ந்து நேற்று அதிகாலையில் மருத்துவமனையின் முன்பாக குவிந்த நோயாளிகளின் உறவினர்கள் கதறி அழுதனர். ஆக்சிஜன் வசதி இல்லாவிட்டால் தங்களது குடும்பத்தினரை வேறுமருத்துவமனைகளுக்கு மாற்றியிருக்க வேண்டும் எனக் கூறி மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட‌னர். அங்கு போலீஸார் வரவழைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

இதுகுறித்து சிம்ஸ் மருத்துவமனை இயக்குநர் சஞ்சீவ் பாட்டீல்கூறும்போது, ‘‘இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு தினமும் 350 சிலிண்டர் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆனால் 35 முதல் 40 சிலிண்டர் ஆக்சிஜன் மட்டுமே வழங்கப்படுகிறது. அவசர தேவைக்குகூட அண்டை மாவட்டங்களில் இருந்து சிலிண்டர் பெற முடியாத நிலை நிலவுகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் நிகழ்ந்த மரணங்கள் துரதிருஷ்டவசமானவை'' என்றார்.

இந்த சம்பவத்துக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 24 பேரின் மரணத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் எடியூரப்பாவும், சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முதல்வர் எடியூரப்பா உடனடியாக சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர், சாம்ராஜ்நகர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சுரேஷ் குமார், சாம்ராஜ்நகர் மாவட்ட‌ சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் எடியூரப்பா கூறும் போது, ‘‘இந்த சம்பவத்துக்கு காரணமானவ‌ர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனி இத்தகைய மரணங்கள் நிகழாதவாறு முன் னெச்சரிக்கை நடவடிக்கை மேற் கொள்ளப்படும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x