

மும்பையில் சமீபத்தில் காணாமல் போன 3 இளைஞர்கள் ஐ.எஸ். (இஸ்லாமிக் ஸ்டேட்) தீவிரவாத அமைப்பில் சேர்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மும்பையின் மேற்கு புறநகரான மால்வானி பகுதியைச் சேர்ந்த இந்த இளைஞர்கள் அயாஸ் சுல்தான் (23), மொஹ்சின் ஷேக் (26), வாஜித் ஷேக் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் அயாஸ் சுல்தானை கடந்த அக்டோபர் 30-ம் தேதியில் இருந்தும், மற்ற இருவரை டிசம்பர் 16-ல் இருந்தும் காணவில்லை. இது தொடர்பாக இவர்களின் பெற்றோர், மால்வானி காவல் நிலையத்தில் புகார் அளித் துள்ளனர்.
இது தொடர்பாக மால்வானி காவல்நிலைய முதுநிலை ஆய் வாளர் மிலிந்த் கெட்டில் கூறும் போது, “அயாஸ் சுல்தான் தனக்கு குவைத்தில் வேலை கிடைத்திருப் பதாகவும் இது தொடர்பாக புனே செல்வதாகவும் வீட்டில் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
மொஹ்சின், தனது நண்பனின் திருமனத்துக்கு செல்வதாகவும், வாஜித் தனது ஆதார் அட்டையில் திருத்தம் செய்யச் செல்வதாகவும் கூறிவிட்டுச் சென்றுள்ளனர். ஒரே பகுதியைச் சேர்ந்த இந்த மூவருக் கும் ஒருவருக்கொருவர் தொடர்பு இருக்கும் என நம்புகிறோம். மேலும் ஒரே நாளில் இருவர் காணாமல் போயுள்ளனர். மூவரின் குடும்பத்தினர் கூறும் தகவல்கள் அடிப்படையில் பார்க்கும்போது, இவர்கள் ஐ.எஸ். அமைப்பினரால் நேரடியாகவோ அல்லது இணைய தளம் வாயிலாகவோ மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்” என்றார்.
இந்த இளைஞர்கள் காணாமல் போனது குறித்து பயங்கரவாத எதிர்ப்பு போலீஸ் படை விசாரணை மேற்கொண்டுள்ளது. இதன் அதிகாரி ஒருவர் கூறும்போது, “3 இளைஞர்களின் இமெயில் கணக்குகளை திறந்து பார்க்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். இதுவரை அந்த முயற்சி வெற்றி பெறவில்லை” என்றார்.