

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீதமும், முஸ்லிம்களுக்கு 5 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்க மகாராஷ்டிர அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தேர்தலை மனதில் வைத்தே ஆளும் கூட்டணி அரசு இந்த ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் மராத்தா மற்றும் முஸ்லிம் சமூகத்தினருக்கு 21 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் மகாராஷ்டிர மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான மொத்த இட ஒதுக்கீடு 73 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக முதல்வர் பிருத்விராஜ் சவாண் கூறியதாவது:
“மராத்தா சமூகம் கல்வி மற்றும் சமுதாய ரீதியாக பின்தங்கிய வகுப்பாகக் கருதப்பட்டு 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு மத ரீதியாக இந்த ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது
இந்த ஒதுக்கீடு உடனடியாக அமலுக்கு வருகிறது. தற்போது மற்ற சமூகத்தினருக்கு வழங்கப்படும் 52 சதவீத இட ஒதுக்கீட்டில் எவ்வித பாதிப்பும் இருக்காது என்றார்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இட ஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கக்கூடாது. ஆகவே, யாரேனும் நீதிமன்றத்தை அணுகினால் அரசின் நிலை என்ன எனக் கேட்டதற்கு, “அப்படி நேர்ந்தால் நீதிமன்றத்தில் எங்களின் நிலையை விளக்குவோம்” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “தேர்தலை மனதில் வைத்து இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாகக் கூறுவது தவறானது. இந்நடவடிக்கை 2004-ம் ஆண்டே தொடங்கப்பட்டது. சச்சார் குழு, ரங்கநாத் மிஸ்ரா குழு ஆகியவை முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தரவேண்டும் என ஏற்கெனவே பரிந்துரை செய்துள்ளன” என்றார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், “சட்டரீதியான ஆலோசனைக்குப் பிறகே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதால், நீதிமன்றத்துக்குச் சென்றாலும் அரசின் முடிவு வலுவாகவே இருக்கும்” என்றார்.
மராத்தா சமூகத்தினருக்கு இதர பிற்படுத்தப்பட்டவர்கள் வகைமையில் குன்பிஸ் என்ற பெயரில் ஏற்கெனவே இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. விதர்பா மற்றும் கொங்கன் பகுதிகளில் ஏராளமாக வசிக்கும் மராத்தா சமூகத்தினர் மக்கள் தொகையில் 31.5 சதவீதமாக உள்ளனர்.
முன்னதாக, தொழிற்துறை அமைச்சர் நாராயண் ரானே தலை மையில் அமைக்கப்பட்ட குழு, மராத்தா சமூகத்துக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கலாம் என பரிந்துரை செய்திருந்தது.