சிறார் குற்றவாளியின் முகத்தை வெளியில் காட்ட நிர்பயாவின் பெற்றோர் வலியுறுத்தல்

சிறார் குற்றவாளியின் முகத்தை வெளியில் காட்ட நிர்பயாவின் பெற்றோர் வலியுறுத்தல்
Updated on
1 min read

டெல்லியில் கடந்த டிசம்பர் 16, 2012-ல் நடந்த பாலியல் வழக்கின் சிறார் (தற்போது மேஜர்) குற்றவாளியின் முகத்தை உலகின் முன் காட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதை அவ்வழக்கில் சிக்கி உயிரிழந்த நிர்பயாவின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து 'தி இந்து'விடம் டெல்லியில் வசிக்கும் நிர்பயாவின் பெற்றோர் கூறியதாவது: "டெல்லியின் முனீர்காவில் இருந்து வீடு திரும்ப வேண்டி எங்கள் மகள் ஏறிய பேருந்தில் அடைந்த கொடுமைகளை அதன் குற்றவாளிகள் அனைவரும் முழுமையாக உணர வேண்டும். இவர்களில் ஒருவரான சிறார் குற்றவாளி விடுதலை செய்யப்படக் கூடாது.

குற்றம் செய்யும்போது கவனத்தில் வராத சிறார் என்பது அதற்கான தண்டனை அளிக்கப்படும் போது மட்டும் முதலாவதாக கருத்தில் கொள்ளப்படுகிறது. இவர் தொடர்ந்து சிறுவர் சீர்தருத்த இல்லத்தில் வைக்கப்பட வேண்டும். இவர் விடுதலையாகி வந்தால் என்ன செய்வார் என்பது குறித்து எங்களால் கணிக்க முடியவில்லை. இதன் மீது அடுத்து என்ன செய்வது எனக்கு தெரியவில்லை.

ஆனால், அந்தக் குற்றவாளி இந்த உலகின் முன் நிறுத்தப்பட வேண்டும். இதற்காக அவரது முகம் வெளியில் காட்டப்படுவது அவசியம். இவர் திருந்திவிட்டார் என எதன் அடிபடையில் நம்புவது? எங்கள் மகள் மீது செய்த கொடுமையை போல் வேறு எந்த பெண் மீதாவது அவர் செய்ய மாட்டார் என என்ன நிச்சயம்?" எனத் தெரிவித்தனர்.

டெல்லியின் 23 வயது மருத்துவ மாணவிக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை எதிர்த்து நடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால், அதிரடியாக சிறார் குற்றவாளி உட்பட ராம்சிங், பவண், முகேஷ், வினய் மற்றும் அக்‌ஷய் ஆகிய ஆறு பேரும் ஒருவர் பின் ஒருவராக கைது செய்யப்பட்டனர்.

விரைவு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு செப்டம்பர் 10, 2013-ல் வெளியான வழக்கின் தீர்ப்பில் அனைவருக்கும் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. இதற்கு முன்பாக குற்றவாளிகளில் ஒருவரான ராம்சிங் அவமானம் தாங்காமல் திஹார் ஜெயிலில் தற்கொலை செய்து கொண்டார்.

இதில் சிறார் குற்றவாளிக்கு மட்டும் மூன்று வருடம் சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இவர் தண்டனைக்காலம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதியுடன் முடிந்து விடுதலையாகும் நிலை உருவாகி உள்ளது. இவரை விடுவிக்கக் கூடாது எனக் கோரி பாஜக தலைவர் சுப்பரமணியன் சுவாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த வழக்கில் தனது பதிலாக மத்திய அரசும் குற்றவாளியை சீர்திருத்த இல்லத்தில் தொடர வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. ஒத்தி வைக்கப்பட்டுள்ள இதன் தீர்ப்பு டிச்அம்பர் 20-க்கு முன்பாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in