Published : 03 May 2021 03:15 AM
Last Updated : 03 May 2021 03:15 AM

கரோனா முன்னெச்சரிக்கைகளை காற்றில் பறக்கவிட்டார் பிரதமர் மோடி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி

கரோனா வைரஸின் இரண்டாம் அலை குறித்து நிபுணர்கள் விடுத்த முன்னெச்சரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி காற்றில் பறக்கவிட்டு விட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் நேற்றுஅளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

கரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவை தாக்கும் என விஞ்ஞானிகளும், மருத்துவ நிபுணர்களும் கடந்த ஆண்டு மத்தியிலேயே எச்சரித்திருந்தனர். அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளும் பெருந்தொற்றின் இரண்டாம் அலையில் சிக்கி கடுமையான பாதிப்புகளை சந்தித்தன. ஆனால், நிபுணர்களின் எச்சரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி அலட்சியப்படுத்தி காற்றில் பறக்கவிட்டார். இதற்கான விலையைதான் இந்தியா இன்று கொடுத்துக் கொண்டிருக்கிறது.

வைரஸ் பரவல் நடப்பாண்டு தொடக்கத்தில் குறைய தொடங்கியதுமே, கரோனாவை பிரதமர் மோடி வென்றுவிட்டதாக பாஜகவினர் தம்பட்டம் அடிக்க தொடங்கிவிட்டனர். ஆனால் இன்று என்ன நடக்கிறது? வைரஸ் காய்ச்சலுக்கு ஆயிரக்கணக்கான உயிர்களை நாம் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

கரோனா இரண்டாம் அலையை சமாளிக்க, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓராண்டு காலம் அவகாசம் இருந்தது. அப்போது அவர் நினைத்திருந்தால், நாடு முழுவதும் வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சுகாதார மையங்களையும், ஆக்சிஜன் உற்பத்தி மையங்களையும் அமைத்திருக்க முடியும். ஆனால், பிரதமர் மோடி இதனை செய்யவில்லை. மாறாக, தேர்தல்களில் மட்டுமே அவர் கவனம் செலுத்தினார். மக்கள் நலனில் சிறிதும் அவர் அக்கறை செலுத்தவில்லை.

இன்று நிலைமை கை மீறி சென்றுவிட்டது. எனவே, வைரஸ் தொற்றை சமாளிக்கும் பொறுப்பை மாநிலங்களிடம் ஒப்படைத்துவிட்டு மத்திய அரசு விலகி நிற்கிறது. கரோனாவை ஒழிக்கும் பணியை விட்டுவிட்டு, பிரதமர் நரேந்திர மோடியின் நற்பெயரை காக்கும் வேலையை மத்திய அரசு பார்த்துக் கொண்டிருக்கிறது. இன்றைய சூழலில் மக்களை காப்பாற்ற அரசாங்கமோ, பிரதமரோ வரப்போவதில்லை.

நாம்தான் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து, விழிப்புணர்வுடன் செயல்பட்டு கரோனாவை வெல்ல வேண்டும். இதைதான் பிரதமர் முன்கூட்டியே கணித்து 'தற்சார்பு' இந்தியாவை உருவாக்குவோம் எனக் கூறியிருக்கிறார் போலும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x