

கேரளாவில் கடந்த 2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கைப்பற்றிய நீமம் தொகுதியையும், 2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இழந்துள்ளது. இதன் மூலம் கேரளாவில் பாஜகவின் வாஷ்அவுட் என்ற நிலை வந்துள்ளது.
கேரளாவில் நடந்த 140 தொகுதிகளுக்கான தேர்தலில்வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி தலைமையிலான எல்டிஎப் கூட்டணி 99 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது, திருச்சூர், நீமம், பாலக்காடு ஆகிய 3 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் இருந்தது. இதனால் கடந்த ஆண்டைவிட பரவாயில்லை என்ற திருப்தியில் பாஜகவினர் இருந்தனர். ஆனால், அடுத்தடுத்த சுற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பாஜகவின் முன்னிலை நிலவரம் சரியத் தொடங்கியது. 5-வது சுற்றில் திருச்சூர் தொகுதியை இழந்தது, 6-வது சுற்றில் பாலக்காட்டையும், நீமம் தொகுதியையைும் இழந்தது.
கடந்த 2016ம் ஆண்டில் மிகவும் போராடி 8 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் நீமம் தொகுதியில் பாஜகவின் ராஜகோபால் வென்றார். கேரளாவின் குஜாரத் என்றெல்லாம் நீமம் தொகுதியை பாஜகவினர் வர்ணித்தினர்.
ஆனால் இந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய முதல்வர் பினராயி விஜயன் “ பாஜகவுக்கு கடந்த தேர்தலில் ஒரு இடம் கிடைத்தது. இந்த ஆண்டு தேர்தலில் அந்த ஒரு இடத்தையும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” எனத் தெரிவித்திருந்தார்.
அதன்படி நீமம் தொகுதியில் கும்மணம் ராஜசேகர் பாஜக சார்பில் போட்டியி்ட்டதால், பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், 6 சுற்றுகள்வரை பின்தங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சிவன்குட்டி அதன்பின் முன்னிலையுடன் சென்றார். கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, நீமம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சிவன்குட்டி 2,300 வாக்குகள் வி்த்தியாசத்தில் கும்மணம் ராஜசேகரை தோற்கடித்துள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2016ம் ஆண்டு நீமம் தொகுதியில் போட்டியிட்ட சிவன்குட்டி 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ஓ ராஜகோபாலிடம் தோல்விஅடைந்தார். ஆனால், இ்ந்த முறை பாஜகவை வீழ்த்தியுள்ளார் சிவன் குட்டி
இதனால், கேரளாவில் பாஜகவுக்கென இருந்த ஒரு இடமும் இந்தத் தேர்தலில் பறிபோனது. கேரள மாநிலத்தில் பாஜக வாஷ்அவுட் ஆகியுள்ளது. கேரளாவில் பாஜகவை வெற்றி பெற வைக்க பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், திரிபுரா முதல்வர் உள்ளி்ட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் பல பிரச்சாரங்களைச் செய்தும் இருந்த ஒரு இடமும் பறிபோய்விட்டது.