

“உரப்பாணு எல்டிஎப்” (எல்டிஎப்தான் உறுதி) இந்த வார்த்தை கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தேர்தல் முழக்கமாகும்.
முதல்வர் பினராயி விஜயன் அறிமுகம் செய்த இந்தத் தேர்தல் முழக்கத்தை மக்கள் உறுதி செய்துள்ளார்கள்.
கேரள அரசியல் வரலாற்றில் இல்லாத வகையில் முதல் முறையாக ஆளும் கட்சி 2-வது முறையாகத் தொடர்ந்து ஆட்சியில் அமரவுள்ளது. முதல்வர் பினராயி விஜயன் மீதான நம்பிக்கையை மக்கள் இந்தத் தேர்தலில் எதிரொலித்து வருகின்றனர்.
இதுவரை கேரளாவில் கடந்த 40 ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என இரு கட்சிகள்தான் மாறி மாறி அரியணையை அலங்கரித்துள்ளன. முதல் முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியில் அமர்கிறது.
140 தொகுதிகளுக்கு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மைக்கு 71 இடங்கள் தேவை. ஆனால், தற்போதுள்ள நிலவரப்படி மாநிலத்தில் 91 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது.
இந்த நிலை தொடர்ந்தால், மீண்டும் 2-வது முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல்தான் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அரையிறுதிப் போட்டியாக அமைந்தது. அந்தத் தேர்தலில் எல்டிஎப் கூட்டணி அமோகமான வெற்றியைப் பெற்றது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து இரு முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்பது, மறைந்த முன்னாள் முதல்வர்களான இஎம்எஸ் நம்பூதிரிபாட், கருணாகரன் ஆகியோரின் கனவாக இருந்தது. அந்தக் கனவை பினராயி விஜயன் நிறைவேற்ற உள்ளார்.
தற்போதுள்ள நிலவரப்படி கண்ணூர் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 9 இடங்களில் எல்டிபி முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல் திருவனந்தபுரத்தில் 14 தொகுதிகளில் 12 இடங்கள், கொல்லம் மாவட்டத்தில் 11 தொகுதிகளி்ல் 9 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
ஆலப்புழா மாவட்டத்தில் 9 தொகுதிகளில் 7 இடங்கள், பாலக்காடு மாவட்டத்தில் 12 தொகுதிகளில் 9 இடங்கள், திருச்சூர் மாவட்டத்தில் 13 தொகுதிகளில் 12 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னிலை பெற்றுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 3 இடங்களில் வெற்றியை மார்க்சிஸ்ட் கூட்டணி உறுதி செய்ய உள்ளது.
இடதுசாரி வேட்பாளரும் தேவஸம்போர்டு அமைச்சருமான கடக்கம்பள்ளி சுரேந்திரன் களக்கூட்டம் தொகுதியில் வெற்றியை நெருங்கியுள்ளார். திருச்சூரில் முன்னிலை பெற்று வந்த பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார், இடதுசாரி வேட்பாளர் பாலச்சந்திரன் முன்னிலை பெற்றுள்ளார்.