Published : 02 May 2021 01:27 PM
Last Updated : 02 May 2021 01:27 PM

திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டம்: தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை

மேற்குவங்கத்தில் கருத்துக் கணிப்புகளையும் தாண்டி ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் முன்னிலை பெற்று வரும்நிலையில் ஆளும் கட்சித் தொண்டர்கள் பெரும் கொண்டாடங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்பட்டன. மேற்குவங்கத்தில் 8-வது கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.

அதேநேரத்தில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்தநிலையில் 8 கட்டமாக நடந்த வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலையில் மேற்குவங்கத்தில் கருத்துக் கணிப்புகளையும் தாண்டி ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.

ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 202 இடங்களிலும், பாஜக 77 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இதனையடுத்து திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் பெரும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொல்கத்தாவில் பல்வேறு பகுதிகளில் ஆளும் கட்சித் தொண்டர்கள் பொது இடங்களில் கூடி ஆடிப்பாடி கொண்டாடி வருகின்றனர். இதற்கு தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய தேர்தல் ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில் ‘‘எந்த ஒரு மாநிலத்தில் எந்த ஒரு கட்சித் தொண்டர்களும் கரோனா கட்டுப்பாடுகளைத் தாண்டி கொண்டாடங்களில் ஈடுபடக்கூடாது. இதற்கு அந்த கட்சித் தலைமையே பொறுப்பேற்க வேண்டும். விதிமுறையை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனக் கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x