மேற்கு வங்கத்தில் இருந்து டெல்லிக்கு 120 டன் ஆக்சிஜன்: இன்று மாலைக்குள் ரயிலில் வந்து சேரும்

மேற்கு வங்கத்தில் இருந்து டெல்லிக்கு 120 டன் ஆக்சிஜன்: இன்று மாலைக்குள் ரயிலில் வந்து சேரும்
Updated on
1 min read

டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மக்கள் பலியாகி வருவது குறித்து, மத்திய அரசு மீது மம்தா பானர்ஜி புகார் கூறி வருகிறார். இச்சூழலில் மேற்கு வங்க மாநிலத்திலிருந்து மத்திய அரசின் பொது நிறுவனத்தைச் சேர்ந்த 120 டன் ஆக்சிஜன் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆறு இரும்பு கொள்கலன்கள், ரயிலில் ஏற்றப்பட்டு நேற்று இரவு கிளம்பியுள்ளன. இது, 1,400 கி.மீ. தூரத்தைக் கடந்து டெல்லிக்கு மாலையில் வந்து சேரும்.

மத்திய ரயில்வே துறை சார்பில் முதன்முறையாக மேற்கு வங்கத்தின் துர்காபூரிலிருந்து டெல்லிக்கு ’க்ரீன் காரிடார்’ எனும் தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதையில் எந்தத் தடையும் இன்றி இந்த ஆக்ஸிஜன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. துர்காபூரிலுள்ள ஸ்டீல் அத்தாரிட்டி ஆல் இந்தியா (செயில்) எனும் மத்திய அரசின் பொது நிறுவனம் உள்ளது. செயில் உற்பத்திக்கான ஆக்ஸிஜன் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் துர்காபூரின் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் மம்தா, ‘இந்த கொடும் கரோனா காலத்திலும் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை மாறவில்லை. துர்காபூரின் செயில் நிறுவனத்தின் ஆக்சிஜனை திடீரென மத்திய அரசு, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அனுப்புகிறது. இதைக் கண்டித்து நான் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் அனுப்பியுள்ளேன்’ எனத் தெரிவித்திருந்தார்.

செயில் அதிகாரிகள் தரப்பில் அளிக்கப்படும் தகவல்களின்படி, கரோனா இரண்டாவது அலையில் செயிலின் இருந்து இதுவரை 2,200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளது. இவை, உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in