Published : 02 May 2021 03:13 AM
Last Updated : 02 May 2021 03:13 AM

கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தன்னார்வலர்களை ஈடுபடுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை

கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தன்னார்வலர்களை ஈடுபடுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

கரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக 3 லட்சமாகஇருந்து வந்த தினசரி தொற்றுபாதிப்பு, நேற்று 4 லட்சத்தை கடந்துள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காத சூழல் எழுந்துள்ளது.

இதேபோல், மருத்துவ ஆக்சிஜனுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பெருந்தொற்று பாதிப்புக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க, வைரஸ் பரவல் அதிகரித்திருப்பதால் நாடுமுழுவதும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு கடுமையான பணிச் சுமை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

அதுமட்டுமின்றி, மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கும் தட்டுப்பாடு நிலவுவதால் அவர்கள் வார விடுமுறை கூட இல்லாமல் பணிபுரியும் சூழல்எழுந்துள்ளது. இதனால் சுகாதாரப்பணியாளர்கள் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சுகாதாரத் துறையினரின் வேலை பளுவையும், மனஅழுத்தத்தையும் குறைக்கும் விதமாக, அவர்களின் சில பணிகளை தன்னார்வலர்களுக்கு பகிர்ந்தளிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத் துறை உயரதிகாரிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், சர்வதேச நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிதி ஆயோக் தலைமைச் செயல்அதிகாரி அமிதாப் காந்த் இக்கூட்டத்துக்கு தலைமை வகித்தார்.

காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

நம் நாடு கரோனா வைரஸின் பிடியில் மீண்டும் சிக்கியுள்ளது. இந்த ஆபத்தில் இருந்து மீள, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அரசியல், சமூகம், துறை என அனைத்து வேறுபாடுகளையும் கடந்து நாம் ஓரணியில் நிற்க வேண்டும்.

தற்போது கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களே முன்களப் போராளிகளாக உள்ளனர். தங்கள் குடும்பம், உறவுகள் என அனைத்தையும் மறந்து நாட்டுக்காக அவர்கள் உழைத்து வருகின்றனர். அவர்களின் தியாகத்தை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது நமது கடமை.

இதனைக் கருத்தில்கொண்டு, சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் தன்னார்வலர்களை ஈடுபடுத்துவது குறித்து நாம் ஆராய வேண்டும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மட்டுமின்றி பொதுமக்களில் உள்ள தன்னார்வலர்களையும் கண்டறிய வேண்டும்.

மருத்துவத் துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லாத பணிகளில், இதுபோன்ற தன்னார்வர்களை ஈடுபடுத்தலாம். இதுதொடர்பாக விரிவான பரிசீலனை அவசியம். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

கரோனா பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நோயாளிகளை கையாள்வதற்கான கால் சென்டர்களில், முன்னாள் ராணுவத்தினரை பணியமர்த்துவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதேபோல, மருத்துவர் - நோயாளி - அவர்களின் உறவினர் ஆகிய மூன்று தரப்புக்கும் இடையே தகவல் பாலமாகவும் தன்னார்வலர்களை பயன்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x