

கேரளாவில் முகாமிட்டு தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட குற்றத்துக்காக சிமி அமைப்பைச் சேர்ந்த 2 பேருக்கு 14 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளது பனயி குளம் பஞ்சாயத்து. இங்கு தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தினர் முகாமிட்டு நாட்டுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், மத்திய அரசுக்கு எதிராக போர் தொடுப் பது பற்றி பேசி வருவதாகவும், இதுதொடர்பாக துண்டுபிரசுரங் கள் விநியோகிப்பதாகவும் பினானிபுரம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
உடனடியாக போலீஸார் விரைந்து சென்று அங்கிருந்தவர் களை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த பாகிஸ்தான் ஆதரவு துண்டுபிரசுரங்கள், மத்திய அரசுக்கு எதிரான புத்தகங்களை பறிமுதல் செய்தனர். இடுக்கி, கோட்டயம், திரிச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சிலர் பனயிகுளம் பகுதியில் ரகசிய கூட்டம் நடத்தி அரசுக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக உள்ளூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) வழக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2011-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் 2014-ம் ஆண்டு குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. அரசு தரப்பு வாதங்கள் கடந்த மார்ச் மாதம் முடிவடைந்தது.
இந்த வழக்கில் 5 பேர் குற்றவாளிகள் என்று கடந்த 25-ம் தேதி அறிவிக்கப்பட்டனர். 11 பேர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் மாவட்ட கூடுதல் நீதிபதி கே.எம்.பாலச்சந்திரன் நேற்று தீர்ப்பு வழங்கினார். குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட 5 பேரில் 2 பேருக்கு 14 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. 3 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், வழக்கில் முதல் 2 குற்றவாளிகள் பி.ஏ.ஷாதுலி, அப்துல் ரசிக் ஆகியோருக்கு தலா ரூ.60 ஆயிரம், மற்ற 3 குற்றவாளிகள் அன்சாரி நத்வி, நசீமுதீன், ஷம்மி ஆகியோருக்கு ரூ.55 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பாலச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார். வழக்கின்போது இவர்கள் சிறையில் இருந்த காலத்தை சட்டப்படி குறைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.