கொள்ளையர்களை மிஞ்சும் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள்: அமைச்சர் நிதின் கட்கரி வருத்தம்

கொள்ளையர்களை மிஞ்சும் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள்: அமைச்சர் நிதின் கட்கரி வருத்தம்
Updated on
1 min read

கொள்ளையர்களை மிஞ்சும் வகையில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்டிஓ) ஊழலில் திளைக்கின்றன என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி வருத்தம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

நாட்டிலேயே மிக மோசமான அளவுக்கு ஊழல் மலிந்த அமைப்பு எது என்றால் அவை ஆர்டிஓ அலுவலகங்கள்தான். சம்பல் கொள்ளையர்களே மேல் என்று சொல்லும் அளவுக்கு இந்த அலுவலகங்களில் ஊழல் மிகுந்துள்ளது.

புதிய மோட்டார் வாகன சட்டம் தாமதமாகி வருவது வருத்தமளிக்கிறது. சாலைப் போக்குவரத்து, பாதுகாப்பு மசோதா நிறைவேறினால் இந்தத் துறை சீர்பட்டுவிடும்.

போக்குவரத்துத் துறை கம்ப்யூட்டர் மயமாவதையும் அதில் வெளிப்படைத்தன்மை கொண்டு வருவதையும் சில சக்திகள் எதிர்க்கின்றன. அவர்கள்தான் புதிய மசோதாவுக்கு எதிராக உள்ளனர்.

குறிப்பாக ஆர்டிஓ அலுவலகங் களில் பணியாற்றும் அதிகாரிகள் மாநில அமைச்சர்களை தூண்டி விட்டு அவர்கள் மூலமாக மசோதாவுக்கு எதிர்ப்பை உரு வாக்கியுள்ளனர். மத்திய அரசு உரிமைகளைப் பறிப்பதாக பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர்.

இப்போது மசோதாவுக்கு ஆதரவாக மாநில அரசுகளை மாற்றி இருக்கிறோம். இந்த மசோதா நிறைவேறினால் போக்குவரத்து துறை துறை சீராகிவிடும். மின்னணு டிரைவிங் லைசென்ஸ், ஆன்லைனில் பெர்மிட் என பல சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வரும்.

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு ரூ. 3 லட்சம் வரை அபராதம், சிறுவர்களுக்கு மரணம் ஏற்படுத்தும் விபத்துகளில் 7 ஆண்டு சிறை போன்ற சட்ட விதிகள் அமலாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in