Published : 28 Mar 2014 09:16 AM
Last Updated : 28 Mar 2014 09:16 AM

மோடியும் மன்மோகனும் நாணயத்தின் இருபக்கங்கள்: இந்திய கம்யூனிஸ்ட் கருத்து

நரேந்திர மோடியும் மன்மோகன் சிங்கும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவர்கள்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியையும், மதவாத பாஜக வையும் புறக்கணித்துவிட்டு மாற்று அணிக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தல் அறிக்கையை வியாழக் கிழமை வெளியிட்டது. டெல்லியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர்கள் ஏ.பி. பரதன், குருதாஸ் தாஸ் குப்தா, டி. ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய தாராளமயக் கொள்கை களை தொடர்ந்து பின்பற்றி வருவதால், நாளுக்கு நாள் பிரச்சினைகள் அதிகரித்து வருகி ன்றன. முதலாளித்துவத்தையும் ஏகாதிபத்தியத்தையும் ஊக்கு விக்கும் செயலில் காங்கிரஸும் பாஜகவும் ஈடுபடுகின்றன. மக்களின் பிரச்சினைகளை நாடாளு மன்றத்தில் எடுத்துச் சொல்ல இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த வர்களை அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்பு, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி பேசியதாவது: “தேர்தலுக்கு பிறகு அரசியல் கட்சிகளின் அணிகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.

இந்த தேர்தலில் முக்கிய பிரச்சினையாக இருப்பது அழிவைத் தரும் தாராளமயக் கொள்கைகளை தொடர்ந்து ஆதரித்து வருவதா அல்லது மாற்றத்தை ஏற்படுத்தி வளர்ச்சிக் கான பலன்கள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கச் செய்யும் கொள்கைகளை பின்பற்றுவதா என்பதுதான். மக்கள் சந்தித்து வரும் சமூக பொருளாதார அடிப்படை பிரச்சினைகளை கம்யூனிஸ்ட் கட்சிகள் நாடாளு மன்றத்தில் எழுப்பினால், அது தொடர்பாக அர்த்தமுள்ள விவாதம் நடைபெறுவதை தடுக்கும் வகையில் காங்கிரஸும் பாஜகவும் நடந்து கொள்கின்றன. தனியார்மயமாக்குவதை இந்த இரு கட்சிகளும் இணைந்து ஊக்குவிக்கின்றன.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட்சியின் மூலம் பல்வேறு சலுகைகளை பெற்றுக்கொண்ட கார்ப்பரேட் நிறுவனங்களும் முதலீட்டாளர்களும், தங்களுக்குச் சாதகமாக ஒத்துழைப்பு தரக்கூடிய நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியை விரும்புகின்றன.

குஜராத்தில் விவசாயிகளி டமிருந்து நிலம் பறிக்கப்பட்டு, தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படுகின்றன. இதன் காரணமாக விளைச்சல் குறைந்துவிட்டது. முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த மக்கள் அவதிப் படுகின்றனர். அந்த மாநிலத்தில் மோடி தலைமையிலான அரசு, பெரும் முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது” என்றார் சுதாகர் ரெட்டி.

தேர்தலுக்குப் பிறகு பிராந்தியக் கட்சிகளுடன் இணைந்து இடதுசாரிக் கட்சிகள் ஆட்சி அமைக்குமா அல்லது காங்கிரஸ் ஆதரவுடன் இடதுசாரிகள் உள்ளிட்ட மூன்றாவது அணி ஆட்சி அமைக்குமா என்று இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஏ.பி. பரதனிடம் கேட்டபோது, “தேர்தலுக்குப் பிறகு அது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுப்போம். தேவைப்பட்டால் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை ஆதரிக்காத கட்சிகளுடன் இணைந்து செயல் படுவோம். இந்த தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெறும்” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறுகையில், “அரசு, தனியார் பங்களிப்புடன் கூடிய திட்டங்களுக்கும், தனியார் திட்டங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதற்கேற்ப இடஒதுக்கீடு கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறையை தனியார் நிறுவனங்களிலும் அமல்படுத்த வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x