அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் தேதியை ஆர்எஸ்எஸ் அறிவிக்க வேண்டும்: சிவசேனா வலியுறுத்தல்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் தேதியை ஆர்எஸ்எஸ் அறிவிக்க வேண்டும்: சிவசேனா வலியுறுத்தல்
Updated on
1 min read

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான தேதியை அறிவிக்க வேண்டும் என, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை, சிவசேனா கேட்டுக் கொண்டுள்ளது.

தன் வாழ்நாள் முடிவதற்குள் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட விரும்புவதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அண்மையில் அறிவித்திருந்தார். இதனால் நாடு முழுவதும் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அயோத்தி பிரச்சினை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ள நிலையில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இவ்வாறு தன்னிச்சையாக அறிக்கை விடுவது மத ரீதியான பதற்றத்தை ஏற்படுத்தும் என பல்வேறு அரசியல் கட்சி களும் கடும் கண்டனம் தெரிவித் திருந்தன. நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் வலுவாக எதிரொலித்தது.

இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான தேதியை மோகன் பகவத் அறிவிக்க வேண்டும் என சிவ சேனா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் அதிகார பூர்வ நாளேடான ‘சாம்னாவில்’ வெளியிடப்பட்டுள்ள தலையங் கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் நிலைப்பாட்டை வரவேற்கிறோம். அதே சமயம் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகளை தொடங்கும் தேதியையும் அவர் அறிவிக்க வேண்டும். அயோத்தியில் ராமர் கோயில் எழுப்ப வேண்டும் என்ற நோக்கத்துக்காக ஏராளமானோர் தங்களது ரத்தத்தை சிந்தி யுள்ளனர். அவ்வாறு இருக்கையில், அயோத்தியில் ராமர் கோயில் எழுப்பாமல் இருந்தால் அவர்களது உயிர் தியாகங்களுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

அயோத்தியில் ராமர் கோயில் எழுப்புவதற்கான துணிச்சல் பிரதமர் நரேந்திர மோடிக்கு இருக்கிறது. இந்த பிரச்சினையை கையில் எடுப்பதன் மூலம் அவரது செல்வாக்கு மேலும் அதிகரிக்கும். சிறுபான்மையினருக்கான அரசு என்ற முத்திரையை மாற்ற அயோத்தியில் ராமர் கோயில் அவசியம் கட்டப்பட வேண்டும். இப்பொழுது முடியாவிட்டால், எப்பொழுதும் முடியாது. எனவே மேற்கொண்டு இந்த பிரச்சினையை இழுக்காமல் விரைவில் முடிவுக்கு கொண்டு வர ஆர்எஸ்எஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in