Last Updated : 01 May, 2021 08:28 PM

 

Published : 01 May 2021 08:28 PM
Last Updated : 01 May 2021 08:28 PM

இன்னொரு ஊரடங்கை இந்தியா தாங்காது; தடுப்பூசியே தீர்வு: பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம்

கரோனா இரண்டாம் அலையினால் இந்தியா கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. முதல் அலையைக் காட்டிலும் இரண்டாவது அலை இந்தியாவை நிலைகுலையச் செய்துள்ளது. தலைநகர் டெல்லியில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் இந்திய பொது சுகாதாரத்தை நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பச் செய்துள்ளது.

இந்த நிலையில் இரண்டாவது அலையை கட்டுக்குள் கொண்டு வர சில வாரங்களுக்கு இந்தியாவுக்கு ஊரடங்கு தேவை என்ற குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால் மீண்டும் ஊரடங்கை இந்தியா சந்தித்தால் நிலைமை நினைத்து பார்க்க முடியாத அளவு மோசமடையும் என்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள்.

இந்த நிலையில், ஊரடங்கினால் ஏற்படும் பாதிப்பு குறித்து நம்மிடம் உரையாற்றுகிறார் பொருளாதார நிபுணர், பேராசிரியர் ஜோதி சிவஞானம்,

மீண்டும் முழுமையான ஊரடங்கு அறிவித்தால் இந்தியாவின் பொருளாதாரம் தாங்குமா? ஊரடங்கை தீர்வாக கூறுபவர்களுக்கு உங்கள் பதில் என்ன?

இன்னொரு முறை முழுமையான ஊரடங்கை அறிவித்தால் இந்தியா நிச்சயம் தாங்காது. கரோனாவால் மக்கள் பாதிக்கப்படும்போது எவ்விதமான இழப்புகள் ஏற்படுகிறதோ அவ்வாறே ஊரடங்கு அறிவித்தால் ஏற்படும் இழப்புகளையும் நாம் பார்க்க வேண்டும்.

ஊரடங்கு அறிவித்தால் மக்கள் இன்னமும் வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்கள். எனவே இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். கரோனா கட்டுப்படுத்தும் குழுக்களில் மருத்துவ நிபுணர்களுடன், பொருளாதார வல்லுனர்கள் இடம்பெற வேண்டும்.

இந்தியாவில் முதல் ஊரடங்கை அறிவித்தபோது சுப்பிரமணியம் என்ற பொருளாதார வல்லுனர் இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்று எச்சரித்தார். அவர் சொன்னதுதான் நடந்தது. ஊரடங்கினால் லட்சக்கணக்கான மக்கள் வேலையை இழந்தார்கள். ஊரடங்கு காரணமாக நாட்டின் வருமானம் கால் பங்கு குறைந்துவிட்டது.

30 வருடங்களாக வளர்ச்சியின் மூலம் நாம் அடைந்த பலன் காரணமாக வறுமை கோட்டுக்கு மேலே வந்த மக்கள் எல்லாம் கடந்த ஊரடங்கு காரணமாக கீழே தள்ளப்பட்டனர். 2011 ஆம் ஆண்டு அரசு கணக்கின் படி 22% பேர் வறுமை கோட்டின் கீழ் இருந்தார்கள். ஆனால் கடந்த ஆண்டு நமது வளர்ச்சி கால் பங்கு குறைந்தததலால் தற்போது 47% மக்கள் வறுமை கோட்டின் கீழுக்கு சென்றுவிட்டனர். கடந்த வருடம் அறிவித்த முழு ஊரடங்கில் நாம் 30 வருடங்காலம் பெற்ற வளர்ச்சியை இழந்துவிட்டோம். எனவே நோய்த் தடுப்பதற்கான முயற்சியில்தான் அரசு தீவிரமாக இருக்க வேண்டும்.


இரண்டாம் அலையின் உச்சத்தை இந்தியா இன்னும் அடையவில்லை என்கிறார்கள் அவ்வாறு இருக்க ஊரடங்கை தவிர்க்க அரசு செய்ய வேண்டியது என்ன?

முதல் கரோனா அலையின் போது நம்மிடம் தடுப்பு மருந்து இல்லை, போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. ஆனால் தற்போது தடுப்பு மருந்து கிடைத்துவிட்டது. தடுப்பு மருந்தின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இறக்குமதி செய்ய வேண்டும். பிற நாடுகள் போர்க்கால அடிப்படையில் தடுப்பூசியை செலுத்தி உள்ளனர். எனவே கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து, தடுப்பு மருந்தை கொண்டு செல்வதன் மூலம் நிச்சயம் ஊரடங்கை தவிர்க்கலாம்.

ஜோதி சிவஞானம்​​​​​


கடந்த ஒரு வருடத்தில் மத்திய அரசு செய்த பிழை என்ன? எதில் தோற்றுப் போனார்கள்?

கடந்த 70 வருடங்களாக பொது சுகாதாரத்துக்கென்று இந்தியா எதுவும் செய்யவில்லை. பொது சுகாதாரத்தைப் பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள நிலைமை வேறு, இந்தியாவில் உள்ள நிலைமை வேறு. இந்திய ஜிடிபியில் மூன்றில் ஒரு பங்கு பொது சுகாதாரத்துக்கு செலவு செய்ய வேண்டும் என்பது இலக்கு.

ஆனால் இதுவரை அதனை அடையவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் சற்று அதற்கான முயற்சியில் இறங்கினார்கள. புதிய அரசு அதனை கூட செய்யவில்லை. இந்தியாவை பொறுத்தவரை பொது சுகாதாரத்துக்கு 80% மாநில அரசுகள்தான் செய்கின்றன. அதிலும் வட இந்திய மாநிலங்கள் செய்வதில்லை. இதுதான் சிக்கலுக்கு காரணம்.

நாம் முதலில் ஊரடங்கு விதித்தபோது நோய் இல்லாத இடங்களுக்கு சேர்த்து விதித்தோம். இந்தியாவின் கிழக்குப்பகுதிகளில் கரோனாவை கொண்டு சென்றது புலம்பெயர்ந்தவர்கள்தான் இதில் எல்லாம் அரசு கவனம் செலுத்தவில்லை.

கரோனா தடுப்பூசியை பொறுத்தவரை அதற்கு மத்திய அரசுதான் பொறுப்பு. உலகில் பிற நாடுகள் அனைத்தும் தடுப்பூசியை இலவசமாகத்தான் தங்கள் நாட்டு மக்களுக்கு வழங்குகின்றன. 35.000 கோடி தடுப்பூசிக்கு ஒதுக்குவதாக மத்திய அரசு பட்ஜெட்டில் தெரிவித்தது. ஆனால் தற்போது நம்மிடம் பணம் கேட்கிறார்கள்.

அன்மையில் நோபல் பரிசு பெற்ற பால் ரோமர் என்பவர், ”எல்லா தரப்புக்கும் பயன்படும், பலனளிக்கும் தடுப்பூசிகளை தனியார் கண்டுபிடித்தாலும் அதற்கான காப்புரிமையை அரசு வாங்கி கொண்டு தடுப்பூசியை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்” என்கிறார்.

எனவே தடுப்பூசியை செலுத்தினால் ஊரடங்கு தேவையில்லை தனிமனித வேலை இழப்புகள் ஏற்படாது, பலி ஏற்படாது, நிறுவனங்கள் மூட தேவையில்லை. உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்த தடுப்பூசிகளை முன்னரே இறக்குமதி செய்திருக்க வேண்டும். இதில்தான் அரசு தோற்று இருக்கிறது. எனவே அரசு தற்போதாவது தனது தவறை உணர வேண்டும். மத்திய அரசு கூடிய விரைவில் தடுப்பூசியை எல்லாருக்கும் வழங்குவதன் மூலமே தனது தவறை திருத்திக் கொள்ள வேண்டும்.

ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகள் பற்றாக்குறை, தற்போது தடுப்பூசிக்கு பற்றாக்குறை என பற்றாக்குறையை நோக்கி மோடி அரசு நகர்ந்துள்ளது பொருளாதார நிபுணராக உங்கள் பார்வை

இந்த மூன்று தவறுமே மத்திய அரசின் மேலாண்மை சரியில்லாமல் இருப்பதைத்தான் காட்டுகிறது. முதலில் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி என்றார்கள். பெரும்தொற்றை பொறுத்தவரை நாம் அவ்வாறு அணுகக்கூடாது. முதலில் கரோனா தொற்று அதிகம் ஏற்படும் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் கவனம் செலுத்தி அவர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்த வேண்டும். எடுத்துக்காட்டுக்கு கோயப்பேடு மார்க்கெட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அங்குள்ள வியாபாரிகளுக்கு முதலில் தடுப்பூசி போட்டிருந்தால் அவர்கள் மூலம் கரோனா பரவுவது தடுக்கப்படும்.

எனவே தடுப்பூசிக்கான முழு உரிமையை நாம் மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டும்.

தற்போது நிலை கட்டுக்கடங்காமல் சென்ற பிறகு எல்லாவற்றையும் மாநிலத்திடம் ஒப்படைக்கிறார்கள். இதனை அரசு முன்னரே செய்திருக்க வேண்டும். முதல் அலைக்குப் பிறகு நம்மிடம் போதிய காலம் இருந்தது தேவையான மருத்துவ கட்டமைப்புகளை அரசு செய்திருக்கலாம் ஆனால் முற்றிலும் தவறிவிட்டது. அதன் விளைவுதான் இந்தப் பற்றாக்குறை.

தடுப்பூசிகள் உற்பத்திக்கு பொதுத்துறை நிறுவனங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலுவான குரல்கல் எழுகின்றனர் அதிலுள்ள நியாயம்?

பொதுத்துறை நிறுவனங்கள் மட்டும் அல்ல, தனியார் நிறுவனங்களுக்கும் இதில் வாய்ப்பளிக்க வேண்டும். அதிக அளவிலான தடுப்பூசிகள் குறுகிய காலத்திலயே இந்தியாவுக்கு தேவை. அவ்வாறு இருக்கும் போது அனைத்து நிறுவனங்களுக்கும் அளிக்க வேண்டும்.

தடுப்பூசியை எவ்வளவு நிறுவனங்களால் உற்பத்தி செய்ய முடிகிறதோ அனைத்து நிறுவனங்களையும் உற்பத்தி செய்யவிட வேண்டும். அவ்வாறு செய்தால்தான் இந்தியாவில் கரோனாவால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க முடியும். முதலில் தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்க வேண்டும்.

இந்திய அரசால் தடுப்பூசியைஅனைவருக்கும் இலவசமாக வழங்க முடியதா? கரோனாவின் அடுத்த அலைகளை இந்தியா எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும்?

நமது ஜிடிபியின் அளவு 200 லட்சம் கோடி ரூபாய். அதில் இலவசமாக தடுப்பூசி வழங்குவதற்கு 60,000 கோடிதான் ஆகும். இது மிக சொற்பமான தொகைத்தான் இது. இருந்த போதிலும் இரண்டு நிறுவனங்களுக்கு உற்பத்தி அனுமதி கொடுத்துவிட்டு அவர்களே தடுப்பூசிக்க் விலை நிர்ணயியம் செய்கிறார்கள்.இதில் மத்திய அரசுக்கு ஒரு விலை, மா நில அரசுக்கு ஒரு விலை. மத்திய அரசுக்கு என்று தனியாக மக்கள் இருக்கிறார்களா? அவர்களும் மாநிலங்களுக்குதானே வழங்வார்கள். ஒரே பயனாளி இரண்டு விலை கொடுத்து எப்படி தடுப்பூசியை வாங்க முடியும்.

நிச்சயம் இந்த சிக்கல்களை இலவசம் என்ற அறிவிப்பால் மத்திய அரசு தகர்க்க முடியும். இரண்டாவது அலையை தடுப்பூசியால் மட்டுமே இந்தியாவால் தகர்க்க முடியும்.

தடுப்பூசிகளை மக்களிடம் கொண்டு சேர்பதன் மூலவே நாம் அடுத்த அலைகளையும் சமாளிக்க முடியும்.

தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x