

டெல்லியில் கரோனா வைரஸின் தாக்கம் குறையாததை அடுத்து, ஊரடங்கை மேலும் ஒரு வாரத்துக்கு அதாவது வரும் 10-ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் கேஜ்ரிவால் கடந்த 26-ம் தேதி ஒரு வாரத்துக்கு மட்டும் லாக்டவுன் அறிவித்தார். அந்த காலக்கெடு வரும் 3-ம் தேதி முடிவதையடுத்து மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கை நீட்டித்துள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் 3.50 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் உச்சகட்டமாக கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றுக்கு ஆளாகினர். டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் உச்சகட்டமாக நேற்று 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். 375 பேர் உயிரிழந்தனர். ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர்.
இதனையடுத்து கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 19-ம் தேதி முதல் 26-ம் தேதிவரை வரை ஒரு வாரம் லாக்டவுனை அமல்படுத்தி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உத்தரவிட்டார். அதன்பின் இந்த லாக்டவுனை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து மே 3-ம் வரை அறிவித்தார்.
ஆனால், கடந்த சில நாட்களாக டெல்லியில் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாமல் இருந்த நிலையில் இன்று பத்ரா மருத்துவமனையில் பற்றாக்குறை ஏற்பட்டு மருத்துவர் உள்பட 8 நோயாளிகள் உயிரிழந்தனர்.
தொற்றின் அளவும் டெல்லியில் குறையாமல் இருந்து வருகிறது. அதிலும் ஆக்சிஜன், வென்டிலேட்டர், ஐசியு சிகிச்சைக்குச் செல்வோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
டெல்லியில் கட்டுக்குள் வராத கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் லாக்டவுன் நடவடிக்கையை மேலும் ஒரு வாரம் அதாவது மே 10-ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் கேஜ்ரிவால் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
''கடந்த லாக்டவுனில் கடைப்பிடித்த அதே விதிகள்தான் நீட்டிப்பிலும் பின்பற்றப் போகிறோம். எந்தவிதமான மாற்றமும் இல்லை. அத்தியாவசியப் பணிகள், அரசு அலுவலகங்கள் தொடர்ந்து இயங்கும். தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் தொடர்ந்து வீட்டிலிருந்து பணியாற்றலாம்.
ஊடகங்கள், வங்கிகளில் பணியாற்றுவோர், காப்பீடு நிறுவனம், வங்கிகள், தொலைத்தொடர்பு உள்ளிட்டவற்றில் பணியாற்றுவோருக்குத் தடையில்லை. சிஎன்ஜி நிலையம், பெட்ரோல் பங்க்குகள் தொடர்ந்து இயங்கும். ஷாப்பிங் மால், ஸ்பா, உடற்பயிற்சிக் கூடம், கூட்ட அரங்கு ஆகியவை மூடப்படும். மளிகைக் கடை, பால் விற்பனை மையம் தொடர்ந்து செயல்படும்'' என்று கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.