

டெல்லியில் உள்ள பத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மருத்துவர் உள்பட 8 கரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படுவதில் இது 3-வது துயர நிகழ்வாகும். இதற்கு முன் கங்கா ராம் மருத்துவமனை உள்ளிட்ட 2 மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பத்ரா மருத்துவமனைக்கு வரவேண்டிய ஆக்சிஜன் குறித்த நேரத்தில் வரவில்லை என்பதாலும், பற்றாக்குறை ஏற்பட்டதாலும் உயிரிழப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பத்ரா மருத்துவமனையில் ஐசியு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளில் 6 பேரும், பொது வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவரும், மருத்துவர் ஒருவரும் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்த மருத்துவர் பெயர் ஆர்.கே.ஹிம்தானி. குடலியக்கவியல் பிரிவின் தலைமை மருத்துவராக ஹிம்தானி இருந்தார்.
பத்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் சுதான்ஷு பங்கதா கூறுகையில், “இன்று நண்பகல் 12.15 மணியிலிருந்து ஆக்சிஜன் சப்ளை இல்லை. அப்போதிருந்தே நோயாளிகளின் நிலை கவலைக்கிடமாக மாறத் தொடங்கியது.
பிற்பகல் 1.35 மணிக்குதான் ஆக்சிஜன் கிடைத்தது. இந்த இடைப்பட்ட நேரத்தில் எங்களிடம் இருந்த ஆக்சிஜன் சிலிண்டரை வைத்துச் சமாளித்தாலும், வென்டிலேட்டர் ஒத்துழைக்கவில்லை. ஆக்சிஜன் பற்றாக்குறையால் 8 பேர் உயிரிழந்தனர்.
எங்களுக்குக் குறித்த நேரத்தில் ஆக்சிஜன் கிடைக்கவில்லை. ஆக்சிஜன் முறையாகக் கிடைக்காவிட்டால், வரும் நாட்களில் மற்ற நோயாளிகளின் நிலைமையும் மோசாகும். நோயாளி ஆபத்தான கட்டத்துக்குச் சென்றுவிட்டால், இறப்பு எப்போது வேண்டுமானாலும் நிகழும்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே ஆக்சிஜன் சப்ளை தீர்ந்தவுடன் மருத்துவர் பங்கதா ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவில், “தற்போது மருத்துவமனையில் ஆக்சிஜன் சப்ளை இல்லை. தற்காலிகமாக ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பயன்படுத்தி வருகிறோம். இது 10 நிமிடங்களில் காலியாகிவிடும்” எனத் தெரிவித்தார்.